தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சிபிஐ போட்டி: மோடி தாக்கு

தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சிபிஐ போட்டி: மோடி தாக்கு
Updated on
1 min read

வரும் சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நிறுத்தாது. தனக்குப் பதிலாக சி.பி.ஐ.யைத்தான் அக்கட்சி போட்டியிட வைக்கும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து சிபிஐ-யை காங்கிரஸ் தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி நரேந்திர மோடி இவ்வாறு கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி புதன்கிழமை பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், “மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களின சட்டப் பேரவைகளுக்கும், மக்களவைக்கும் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில், காங்கிரஸ் தனது சார்பில் சி.பி.ஐ-யை நிறுத்தும் போலத் தெரிகிறது. அந்த அளவுக்கு சி.பி.ஐ.யை அக்கட்சி தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

மாநிலங்களில் உள்ள பாஜக கூட்டணி ஆட்சிகளை, மத்தியில் ஆளும் காங்கிரஸ், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். பாஜகவை எதிர்கொள்ளும் திறன் காங்கிரஸுக்கு இல்லை. மக்கள் தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்காக காங்கிரஸ் கட்சியை தண்டிப்பார்கள்.

காங்கிரஸின் ஊழல் நடவடிக்கையிலிருந்து தேசத்தை காக்க வேண்டும். காங்கிரஸ் கையிலிருந்து தேசத்தை விடுவிக்க வேண்டும். மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சௌகானை அமைதியாக ஆட்சி நடத்த விடாமல் காங்கிரஸ் தடுக்கிறது. மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது.

நீங்கள் (காங்கிரஸ்) சண்டை போட வேண்டும் என்று விரும்பினால் எங்களைப் போன்ற தலைவர்களுடன் சண்டையிடுங்கள். வீணாக பொதுமக்களுடன் மோதி, அவர்களின் உரிமையை பறிக்காதீர்கள். அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்கெனவே அமல்படுத்தி வரும் நிலையில், அது தொடர்பாக இப்போதுதான் காங்கிரஸ் பேசி வருகிறது.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் இதை உறுதிப்படுத்துகின்றன” என்றார் நரேந்திர மோடி.

முன்னதாக, தனது பேச்சுக்கு இடையே, நாடு சுதந்திரமடைந்த பின்பு காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கடைசி ஆசையை நீங்கள் நிறைவேற்றுவீர்களா என்று தொண்டர்களைப் பார்த்து கேட்டார் மோடி. அதற்கு, நிறைவேற்றுவோம் என தொண்டர்கள் பதிலளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in