லெஹர் புயல் 28ம் தேதி ஆந்திராவில் கரையை கடக்கிறது

லெஹர் புயல் 28ம் தேதி ஆந்திராவில் கரையை கடக்கிறது
Updated on
1 min read

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் லெஹர் புயல் 28ம் தேதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினத்துக்கும் கலிங்கப் பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது புதன்கிழமை அதிகாலை அந்தமானில் கரையை கடந்தது. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காலை 11.30 மணிக்கு மசூலிப் பட்டினத்திலிருந்து 1,200 கி.மீ. தூரத்திலும் காக்கிநாடாவிலிருந்து 1,140 கி.மீ. தூரத்திலும் நிலைக் கொண்டுள்ளது.

இது மேலும் தீவிரமடைந்து வியாழக்கிழமை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கிறது.

லெஹர் புயலின் தீவிரத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமானில் மிக கன மழை அல்லது கன மழை பெய்யும். அதன் பிறகு மழை படிப்படியாக குறையும்.

லெஹர் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதும் இல்லை. தமிழகத்தில் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வட மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும்.

புதன்கிழமை காலை 8.30 மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்துள்ளது.

உள் மாவட்டங்களில் சில இடங்களில் பெய்துள்ளது. அதிக பட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும். கன மழை பெய்ய வாய்ப்பில்லை. ஆனாலும் வட கிழக்கு பருவ மழைக் காலம் என்பதால் இன்னும் ஒரு மாதத்துக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in