

எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சிசி, அரசுமுறை பயணமாக டெல்லி வந்திருந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு ஒத்துழைப்பு, தீவிரவாத பிரச்சினை உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், அதிபர் சிசியுடன் பிரதமர் மோடி கூட்டாக பத்திரிகையாளர் களை நேற்று சந்தித்தனர். அப்போது மோடி கூறியதாவது:
தீவிரவாதமும், அதிகரித்து வரும் வன்முறைகளும் இந்தியா, எகிப்துக்கு மட்டும் அச்சுறுத்தலாக இல்லை. இந்த அச்சுறுத்தல்கள் எல்லா நாடுகளுக்கும் உள்ளது. எல்லைகளை கடந்த எல்லா இடங் களிலும் உள்ளது. இந்த விஷயத் தில் எகிப்து அதிபர் சிசியும் நானும் ஒரே கருத்து கொண்டுள்ளோம். எனவே, நாட்டின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க இருவரும் ஒப்புக் கொண்டுள்ளோம். அதன் படி பாதுகாப்பு துறைத் வர்த்தகம், பயிற்சி, போர் திறன் மேம்பாடு, தகவல் பரிமாற்றம், தீவிர வாதத்தை ஒடுக்குவது போன்ற முக்கிய விஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட நாங்கள் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளோம்.
போதை பொருள் கடத்தல், சட்டவிரோத பணப் பரிமாற்றம், சர்வதேச அளவில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும் ஒப்புக் கொண்டுள்ளோம்.
இந்தியாவும் எகிப்தும் உலகில் மிகப்பழமை வாய்ந்த நாகரிகம் கொண்ட நாடுகள். சிறந்த கலாச் சாரங்களை கொண்ட இரு நாட்டு மக்களுக்குள் தொடர்புகள் ஏற் படுத்தவும், கலாசாரங்களைத் பரி மாறிக் கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுத்தித்தர ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வெளியுறவு விவகாரங்கள் துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் ட்விட்டர் மூலம் வெளியிட்ட தகவலில், ‘இருநாட்டு மற்றும் பலதரப்பு ராஜ்ஜிய உறவுகளைப் பலப்படுத்த, கிழக்கு நோக்கிய பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். சனிக்கிழமை அன்று, வியட்நாமில் உள்ள அரசியல் தலைவர்களைச் சந்திக்கும் நரேந்திரமோடி, அங்கிருந்து சீனாவுக்குச் சென்று, ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்’ எனக் கூறப்பட்டுள்ளது.