

திசை திருப்பப்பட்ட காஷ்மீர் இளைஞர்களுக்கு பாலிவுட் திரையுலகின் ஷாருக், சல்மான், ஆமீர் கான்கள் ஆலோசனை கூறி நல்வழிப்படுத்த வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தலையங்கத்தில், "காஷ்மீர் இளைஞர்கள் சிலரால் திசைதிருப்பப்பட்டு வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலிவுட் திரையுலகின் ஷாருக், சல்மான், ஆமீர் கான்கள் ட்விட்டர் சமூக வலைதளம் மூலம் காஷ்மீர் இளைஞர்களுக்கு நல் வழி காட்ட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயகம் திரும்பி பதிலடி கொடுத்திருக்க வேண்டும்:
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அமெரிக்காவில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சாம்னாவில், "ஷாருக்கான் கடந்த 7 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் இந்தியாவுக்கு திரும்பியிருந்தால் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டிருக்கும். அவர் பொறுமையை அமெரிக்கா சோதிக்கிறது.
அமெரிக்கா முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதியாகவே பார்க்கிறது. ஒருவேளை ஷாருக்கான் தனது பயணத்தை ரத்து செய்து தாயகம் திரும்பியிருந்தால் தேசப்பற்றை நிரூபித்ததோடு அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கலாம்" என சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கானுக்கு நேர்ந்தது என்ன?
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானியுடன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சென்றார். லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் சென்றதும், நீட்டா அம்பானியை நாட்டுக்குள் செல்ல அனுமதித்த அமெரிக்க குடியுரிமை அதிகாரி கள், ஷாருக்கானை மட்டும் தடுத்து நிறுத்தினர். அத்துடன் அவரது உடைமைகளை சோதித்து விட்டு, 2 மணி நேரத்துக்கு பின் அவர் செல்ல அனுமதி அளித்தனர்.