

டெல்லியில் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் நேற்று எலிக்கறி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் சுமார் 100 பேர் டெல்லி, ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த 13-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் 14-ம் நாளான நேற்று, இவர்கள் எலிகளை வாயில் கவ்விப் பிடித்தபடி போராட்டம் நடத்தினர்.
போராட்டக் களத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அக்கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன் ஆகியோர் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இது குறித்து சீத்தாராம் யெச்சூரி கூறும்போது, “தமிழக விவசாயிகளிடம் மத்திய அரசு மனிதத் தன்மையற்ற முறையில் நடந்துகொள்கிறது. கடந்த 14 நாட்களாக போராடி வரும் இவர்களை உடனே அழைத்துப் பேச வேண்டும்” என்றார்.
டி.கே.ரங்கராஜன் கூறும் போது, “தமிழக விவசாயிகளை எம்.பி.க்கள் குழு சந்தித்து குறை களை கேட்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத் தினோம். இதற்கு மத்திய அரசு மறுத்து விட்டது. நாளை (இன்று) மீண்டும் இந்தப் பிரச்சினையை மாநிலங்கள வையில் எழுப்புவோம்” என்றார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவும் நேற்று தனது ஆதரவை நேரில் தெரிவித்தார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு கூறும்போது, “தமிழக விவசாயிகள் எலிக்கறி உண்ணும் சூழலுக்கு மத்திய அரசு தள்ளிவிட்டதை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தினோம். எங்கள் பிரச்சினை தொடர்பாக பலர் நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்து வலியுறுத்தியும் எந்தப் பலனும் இல்லை. எனவே சாகும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார். இதற்கிடையே மேற்கு உ.பி.யின் வலுவான அமைப்பான இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் சுமார் ஆயிரம் விவசா யிகள் நேற்று டெல்லி வந்திருந் தனர். இவர்களும் தமிழக விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.