Published : 22 Feb 2014 02:27 PM
Last Updated : 22 Feb 2014 02:27 PM

திராட்சை உற்பத்தியில் கர்நாடகத்துக்கு 2-ம் இடம்- அதிக லாபத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

தேசிய அளவில் திராட்சை உற்பத்தியில் மஹாராஷ்டிரா முதலிடத்தையும் கர்நாடகா 2-வது இடத்தையும் பெற்று சாதனை படைத் துள்ளன. இந்த ஆண்டு திராட்சை விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் சிக்கப்பள்ளாப்பூர், கோலார், பெங்களூர் ஊரகம், கொப்பல், பீஜாப்பூர் மற்றும் பாகல் கோட்டை ஆகிய மாவட்டங்களில் திராட்சை வேளாண்மை அதிகமாக நடைபெறுகிறது.

ஹாசன், ஷிமோகா, உடுப்பி, சிக்கமகளூர் ஆகிய மாவட்டங்களில் கணிசமாக திராட்சை வேளாண்மை செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கர்நாடகாவில் பருவமழை குறைந்ததன் காரணமாகவும் தட்பவெப்ப நிலை மாறியதன் காரணமாகவும் திராட்சை விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

இந்நிலையில், இந்த ஆண்டில் போதிய அளவுக்கு பருவ மழை பெய்ததாலும் திராட்சை சாகுபடிக்கு உகந்த மிதமான குளிர், பனிப்பொழிவு நிலவியதாலும் திராட்சை சாகுபடி அதிகமாக செய்யப்பட்டது. இதனால் முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு திராட்சை விளைச்சல் அதிகரித்திருக்கிறது. சர்வதேச சந்தையிலும் உள்ளூர் சந்தை யிலும் திராட்சைக்கு நல்ல விலை கிடைத் திருப்பதால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளிடமிருந்து கர்நாடக அரசே நேரடியாக நல்ல விலைக்கு திராட்சையை கொள்முதல் செய்துள்ளதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் சராசரியாக 30 ஆயிரம் ஹெக்டர்களில் 13 வகையான திராட்சை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு மட்டும் கர்நாடகாவில் 6.04 லட்சம் டன் திராட்சை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா 7 லட்சம் டன்னுக்கும் அதிகமாக திராட்சையை உற்பத்தி செய்து முதலிடத்தைப் பிடித்தது.

திராட்சை திருவிழா

விவசாயிகளிடம் நேரடியாக அரசே கொள்முதல் செய்த திராட்சையை சந்தைப் படுத்தும் விதமாக கர்நாடகாவில் திராட்சை திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இது அடுத்த இரண்டு மாதங்களுக்கு கர்நாடகா முழுவதும் நடைபெறும்.

பெங்களூரில் நடைபெறும் திராட்சை திருவிழாவை முன்னிட்டு, கடையை அலங்கரிக்கும் பெண்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x