

பிஹாரில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதி மன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான மசோதாவை முதல்வர் நிதிஷ்குமார் தலைமை யிலான அரசு விரைவில் கொண்டுவர உள்ளது.
பிஹாரில் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி முதல், பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற் கான சட்டத்தை அமல்படுத்துவதில் நிதிஷ்குமார் அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மது விலக்கு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கும் வகையில் தனி நீதிமன்றங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை சட்டப் பேரவையில் வரும் மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில உயரதிகாரி கள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “மற்ற குற்றங் களுடன் சேர்த்து மதுவிலக்கு வழக்குகளையும் தற்போதுள்ள நீதிமன்றங்கள் விசாரிப்பதால் காலதாமதம் உட்பட பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே இதற்கென தனி நீதிமன்றங்கள் அமைக்கவும் மதுவிலக்கு சட்டப் பிரிவுகளை கடுமையாக்கியும் புதிய மசோதா தயாராகி வருகிறது” என்று தெரிவித்தனர்.
மதுவிலக்கு தொடர்பான புதிய சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு பிஹாரின் அனைத்து மாவட்டங் களிலும் தனி நீதிமன்றங்கள் அமைய உள்ளன. இந்த நீதிமன்றங் களுக்கு நீபதிபதிகள் மற்றும் அலுவலர்களை பணியமர்த்த பாட்னா உயர் நீதிமன்றம் தயாராகி வருகிறது. மழைகாலக் கூட்டத் தொடரில் மசோதா நிறைவேறிய பின் உடனடியாக தனி நீதிமன்றங் கள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் பிஹாரில் சிறை களின் எண்ணிக்கையை அதி கரிக்கவும் நிதிஷ் அரசு ஆலோ சித்து வருகிறது. ஏனெனில், தற் போதுள்ள சிறைகள் ஏற்கெனவே நிரம்பி வழியும் நிலையில் மது விலக்கு குற்றங்களில் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மாதம் ஒன்றுக்கு சுமார் 2,500 வழக்குகள் பதிவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இவர் களுக்கு உடனடி ஜாமீன் கிடைக் காமல் குறைந்தது 52 நாட்கள் சிறையில் இருக்கும் வகையில் மது விலக்கு சட்டம் அமைந்துள்ளது.
இதற்கிடையே பூர்ணியா, சிவான் ஆகிய மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்கள் மதுவிலக்கு குற்றங்களில் சிக்கிய சிலருக்கு உடனடியாக ஜாமீன் அளித்துள் ளது. இதற்கு அரசுத் தரப்பு வழக் கறிஞர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காததே காரணம் என புகார் எழுந்துள்ளது.
இந்தப் பிரச்சினை முதல்வர் நிதிஷ்குமாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டபோது, இது போன்ற அரசு வழக்கறிஞர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.