Published : 22 Oct 2014 10:25 AM
Last Updated : 22 Oct 2014 10:25 AM

12 நகரங்களின் பெயரை மாற்ற கர்நாடகம் முடிவு: எதிர்த்துப் போராட்டத்தில் குதிக்கும் மராட்டியர்கள்

பெங்களூர், மங்களூர், பெல்காம் உட்பட கர்நாடகாவின் 12 நகரங்களின் பெயர்களை மாற்றும் மத்திய, மாநில அரசுகளின் முடிவுக்கு அங்குள்ள‌ பல்வேறு மொழி சிறுபான்மை அமைப்புகளும் கல்வி நிலையங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பெல்காமில் உள்ள மஹாராஷ்டிரா எகி கிரண் சமிதியும் சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. கடந்த 2005-ம் ஆண்டு ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் மறைந்த யூ.ஆர்.அனந்தமூர்த்தி, ‘ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட பெங்களூர், மைசூர், மங்களூர், பெல்காம் உள்ளிட்ட நகரங்களின் பெயர்களை கன்னடத்தில் மாற்ற வேண்டும். ஆங்கிலமயமாக்கலை தடுக்காவிடில்,எதிர்காலத்தில் கன்னடர்கள் தங்களின் அடையாளத்தை இழந்து விடுவார்கள்.

எனவே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சூட்டப்பட்ட நகரங்களின் பெயர்களை கன்னடத்தில் மாற்ற வேண்டும்' என கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து 2006 அக்டோபர் 27-ம் தேதி அப்போதைய கர்நாடக முதல்வர் குமாரசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், “ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் சூட்டப்பட்ட 12 நகரங்களின் பெயர்களை, கன்னடப் பெயர்களாக மாற்ற வேண்டும்''என கோரியிருந்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.

ராஜ்நாத் சிங் ஒப்புதல்

இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, 12 நகரங்களின் பெயர்களை கன்னடத்தில் மாற்ற கோரிக்கை விடுத்தனர். இதனால் கிடப்பில் இருந்த பெயர் மாற்ற கோரிக்கையை ஏற்ற ராஜ்நாத் சிங் அதற்கு ஒப்புதல் அளித்தார்.

இது தொடர்பாக சமீபத்தில் அவர் வெளியிட்ட அரசாணையில், ‘12 நகரங்களின் பெயர் மாற்றம் செய்யப்படுவது தொடர்பாக எல்லை வரையறை துறை, ரயில்வே துறை, அஞ்சல் துறை, அறிவியல், தொழில்நுட்பத் துறை, உளவுத் துறைகளின் தடையில்லா சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. எனவே கர்நாடக அரசு அந்நகரங்களின் பெயர்களை மாற்றிக் கொள்ள தடையேதும் இல்லை'என தெரிவித்தார்.

பெங்களூர்(எ) 'பெங்களூரு'

இதனைத் தொடர்ந்து 12 நகரங்களின் பெயர்களும் வருகிற நவம்பர் 1-ம் தேதி முதல் கன்னடத்தில் மாற்றப்பட உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார். புதிய பெயர்கள் பின்வருமாறு:

பெங்களூரு (பெங்களூர்), பல்லாரி (பெல்லாரி), விஜாபுரா (பிஜாப்பூர்), சிக்மகளூரு (சிக்மகளூர்), கலபுர்கி (குல்பர்கா), மைசூரு (மைசூர்), ஹொசபேட்டே (ஹொஸ்பேட்), சிவமொக்கா (ஷிமோகா), ஹுப்ளி (ஹூப்ளி), துமகூரு(தும்கூர்), பெலகாவி (பெல்காம்), மங்களூரு (மங்களூர்) என பெயர் மாற்றப்பட உள்ளன.

மொழி சிறுபான்மையினர் எதிர்ப்பு

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் 12 நகரங்களின் பெயர்களும் கன்னடத்தில் மாற்றுவதற்கு தமிழ் உள்ளிட்ட‌ பல்வேறு மொழி சிறுபான்மையின அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.பெங்களூரின் பெயரை பெங்களூரு என மாற்றுவதற்கு பெங்களூர் பல்கலைக்கழகம், ஐஐஎம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் 'பெங்களூர் கிளப்' போன்ற தனியார் நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பயோகான் நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும், பெங்களூர் மாற்றத்திற்கான சிந்தனையாளர் அமைப்பின் தலைவருமான கிரண் மஜூதர் ஷா பேசும் போது, “பெங்களூரின் பெயரை மாற்றுவதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை.

பெங்களூர் நகரத்துக்கு அடிப்படை வசதிகளும்,முதலீடுகளும் தான் தேவை. பெயர் மாற்றம் அல்ல. நகரங்களின் பெயரை மாற்றுவதால் தேவையற்ற குழப்பம் ஏற்படும்.உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அரசியல்வாதிகளின் வாக்கு வங்கிக்குகூட உதவாது. பெங்களூரில் பல மொழிகளை பேசும் மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். பெயர் மாற்றத்தின் மூலம் மொழி பிரிவினை வாதம் அதிகரிக்கும். எனவே இந்த‌ திட்டத்தை அறிவு ஜீவிகளும் இலக்கிய வாதிகளும், பொதுமக்களும் எதிர்க்க வேண்டும்'' என்றார்.

மராட்டியர்கள் எதிர்ப்பு

இந்நிலையில் பெல்காமின் பெயரை ‘பெலகாவி' என மாற்றுவதற்கு மகாராஷ்டிராவில் உள்ள அரசியல் கட்சிகளும், பெல்காமை சேர்ந்த மகாராஷ்டிரா எகி கிரண் சமிதி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பெல்காமின் சட்டமன்ற உறுப்பினர் சம்பாஜி பாட்டீல் பேசும்போது,‘‘பெல்காம் தொடர்பாக கர்நாடகாவிற்கும் மஹாராஷ்டிராவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. பெயர் மாற்றம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் பெல்காம் நகரின் பெயரை மாற்றுவது நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றது.

மத்தியில் ஆளும் பாஜக அரசும் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசும் இந்த முடிவை கைவிட வேண்டும். இல்லையென்றால் பெல்காமை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும். பெயர் மாற்றத்தை கண்டித்து நவம்பர் 1-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க இருக்கிறோம். அன்றைய தினம் பெல்காம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x