

குஜராத்தில் 2002ல் நடந்த வகுப்புக் கலவரத்தில் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் மற்றவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) கொடுத்த அறிக்கையை அகமதாபாத் மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றம் ஆமோதித்துள்ளதை ஆட்சேபித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் செவ் வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார் ஜகியா ஜெப்ரி.
கலவரத்தின்போது கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எசான் ஜெப்ரியின் மனைவி ஜகியா. குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்தின் பின்னணியில் நரேந்திர மோடி மற்றும் 59 பேர் கிரிமினல் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்ட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தில் மோடியின் தலையீடு இல்லை என சிறப்பு புலனாய்வுக் குழு கொடுத்த அறிக்கையை ஆட்சேபித்து ஜகியா ஜெப்ரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி தாக்கல் செய்த மனுவை நிராகரித்தார் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் பி.ஜே.கானத்ரா.
உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு, வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்ததுடன் மோடி உள்ளிட்ட மற்றவர்களுக்கு இந்த கலவரத்தில் தொடர்பு இல்லை என்று 2012ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் முதன்மையானவராக இடம்பெற்றுள்ள மோடியிடம் சிறப்பு புலனாய்வுக் குழு சுதந்திரமான நடுநிலைமையான விசாரணை நடத்தவில்லை. மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் ஜகியா தெரிவித்திருக்கிறார். இந்த மனு மீது உயர்நீதிமன்றம் மார்ச் 20ம் தேதி விசாரணை நடத்தும் என தெரிகிறது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து 2002 பிப்ரவரி 28ம் தேதி குஜராத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் ஜகியாவின் கணவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான எசான் ஜெப்ரி உள்ளிட்ட 68 பேர் அகமதாபாதில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் நடந்த வன்முறைச் சம்பவத்தின்போது எரித்துக் கொல்லப்பட்டனர்.