சறுக்கல்களும்.... சாக்குகளும்!

சறுக்கல்களும்.... சாக்குகளும்!
Updated on
3 min read

என்ன தான் ஆச்சு ஊடகங்களில் கோலோச்சும் நம் அரசியல் கணிப்பு நிபுணர்களுக்கு? வாக்காளர்களின் மனநிலையை கணிப்பதில் அடிக்கடி சறுக்கிக் கொண்டிருக்கிறார்களே..!

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நடந்ததுதான் தேசம் தழுவிய மிகப் பெரிய சறுக்கல். இப்போதும் அதே போல் வாக்காளர்களுக்கும் இந்த அரசியல் கணிப்பாளர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்திருக்கிறதே தவிர, குறையவில்லை.

உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வராது என்று எத்தனை உறுதியாகச் சொன்னார்கள். ராகுலும் அகிலேஷும் கரம் கோர்த்துவிட்டதே மிகப் பெரிய அலையை எழுப்பி இருப்பதாகச் சொன்னார்கள். 500, 1000 ரூபாய் நோட்டுக்களை திடீரென செல்லாது என அறிவித்ததால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு ஏற்பட்டிடுக்கிற மிகப் பெரிய கோபத்துக்கு இந்த 5 மாநிலத் தேர்தலில் சவுக்கடியான பதில் கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.

டிவியில் மணிக்கணக்காய் அலசி ஆராய்ந்து இதைத்தான் பேசினார்கள். அத்தனை பத்திரிகைகளிலும் பக்கம் பக்கமாக இதைத்தான் எழுதினார்கள். ஆனால், சறுக்கிவிட்ட பிறகு அதையும் ஒப்புக் கொள்ள மனமில்லாமல், உ.பி.யில் மோடிக்குக் கிடைத்திருக்கும் வெற்றியைக்கூட, ஏதோ இந்தியாவின் எதிர்காலத்துக்கு அடிக்கப்பட்ட அபாய மணி என்பதுபோல, தங்கள் தோல்விக்கு மருந்து பூசிக் கொள்கிறார்கள் இந்த கணிப்பாளர்கள்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சங்கடங்களைச் சந்தித்த மக்கள், மோடியின் இந்த உத்தரவை ஊழல் செய்து, லஞ்சம் வாங்கி கறுப்புப் பணத்தை குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையாகத்தான் பார்த்தார்களே தவிர, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகப் பார்க்கவில்லை. அதனால்தான், இந்தியாவின் பெரிய மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் இதுவரை கொடுக்காத மிகப் பெரிய வெற்றியை பாஜகவுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என உ.பி.யில் ஆட்சியில் இருந்த மூன்று பெரிய கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு முஸ்லிம் ஓட்டுகளை கவர முயன்றன. முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கின. இந்த நிலைப்பாடும் சேர்த்தே, பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டுக்கள் ஒட்டுமொத்தமாக பாஜக பக்கம் திரும்பியதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள வெகுஜன பத்திரிகைகளின் கட்டுரையாளர்கள் நினைப்பும் தப்பாகத்தான் இருக்கிறது. மணிப்பூரில் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாதான் ஆட்சியைப் பிடிப்பார் என்றார்கள். அவர்தான் மணிப்பூரின் எதிர்காலம் என்றார்கள். ஆனால் மக்கள் வேறு விதமாக நினைத்தார்கள். அவரே தேர்தலில் தோற்றுப்போனார். அவர் வாங்கிய ஓட்டுகள் வெறும் 90 தான். அவருடைய தோல்வி வருத்தத்துக்கு உரியதுதான். ஆனால், தேர்தல் என்று வரும்போது, பாமர மக்கள் போடுகிற கணக்கும் அறிவுஜீவிகளின் கணிப்பும் பொருந்துவதே இல்லை.

குறிப்பாக மோடி விஷயத்தில் இந்த அரசியல் விற்பன்னர்கள் சறுக்கிக் கொண்டே இருப்பதற்கு முக்கிய காரணம், இவர்களில் பலர் மதச்சார்பற்றதன்மை என்பதையே ஒருவிதமான முத்திரைபோல மனதில் ஏந்திக் கொண்டு, எந்த நல்ல - கெட்ட அரசியல் செயல்பாடுகளுக்கும் உரிய மதிப்பு தந்து நடுநிலையாக எடை போடத் தவறுவதுதான். ‘மோடி எதிர்ப்பு’ என்பதையே ஒரு மதம் போல கண்ணை மூடிக்கொண்டு கடைபிடிப்பவர்கள் இவர்கள்.

மோடி ஆட்சியின்போது குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு நேரடியாக பாஜக-வை மட்டுமே இன்றுவரை காரணமாகக் காட்டும் இவர்களுக்கு, 1984-ல் டெல்லியில் நடந்த இனப்படுகொலையோ... சீக்கியர்கள் குறிவைத்து அழித்தொழிக்கப்பட்டதோ... காங்கிரஸின் தவறாக ஒருபோதும் தெரிவதில்லை. ஆனால், குஜராத் கலவரத்துக்கும் சரி... டெல்லி கலவரத்துக்கும் சரி... இன்றைய அரசியல் நிலவரத்துடன் முடிச்சுபோட்டு குழப்பிக் கொள்ள வாக்காளர்கள் தயாரில்லை என்பதுதான் உண்மை.

குஜராத்தில் பாஜக கடந்த 19 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. காரணம் மாநிலத்தின் வளர்ச்சி. அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு. தரமான சாலை வசதி. புதிய பள்ளிகள். தொழில் தொடங்க தாராள அரசு உதவி. அங்கே தொடர் வெற்றியைக் கொடுக்கவோ, தோல்வியை வருங்காலத்தில் உண்டாக்கவோ... மோடிதான் முதல்வராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒருவேளை, இப்போதும் அவர் அங்கே முதல்வராகத் தொடர்ந்திருந்தால்... இந்த ஊடக கணிப்பாளர்கள் அத்தனை பேரும், இந்திய அரசியலை மறந்துவிட்டு குஜராத் பற்றியே குமுறிக் கொண்டு இருப்பார்களோ என்னவோ..!

‘மோடி’ என்கிற ஒரு முகம் முன்னிலையில் இருப்பதாலேயே, முஸ்லிம்கள் பாஜகவுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என டிவிக்களும் பத்திரிகைகளும் கணித்தன. ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 42 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 32 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. பாஜக வென்ற அத்தனை தொகுதிகளிலும் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியிருந்தன. இதையும் தாண்டித்தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட களமிறக்கவில்லை! இதற்கும் போகப் போக ‘காரணம்’ கண்டுபிடிப்பார்கள் நம் கணிப்பாளர்கள்!

ஒரே தொகுதியில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் பெரிய கட்சிகளின் சார்பில் நிற்கும்போது, முஸ்லிம் ஓட்டுகள் பிரியும். அதே நேரம், இந்துக்களின் ஓட்டு ஒரே இடத்தில் குவியும். இதை மறுக்க முடியாது. ஆனால் இதையும் மீறி முஸ்லிம்கள் பாஜகவை ஆதரித்திருப்பதை மறுக்க முடியாது.

முத்தலாக் முறையை பாஜக எதிர்க்கிறது. அதனாலேயே முஸ்ஸிம் பெண் வாக்காளர்கள் பாஜகவை ஆதரித்திருக்கிறார்கள் என்கிறது இன்னொரு ஆய்வு. இப்படி பல விஷயங்கள் இந்த தேர்தலில் பாஜக வெற்றியை உறுதி செய்திருக்கின்றன.

2012-ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 7 சதவீத முஸ்லிம்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போட்டனர். 2014 மக்களவைத் தேர்தலில் இது 10 சதவீதமாக அதிகரித்தது. இப்போதும் அதே அளவுக்கு முஸ்லிம்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர் என்கிறது லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் ஆய்வு.

உ.பி., மணிப்பூர் தேர்தலில் சொன்னது நடக்கவில்லை. கணித்தது பலிக்கவில்லை. எல்லாமே தலைகீழாக நடந்துவிட்டது. இதுபோன்ற நேரத்தில் பாஜகவுக்கு எதிரான மனப்பான்மை கொண்ட பத்திரிகையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதற்கு சரியான நேரம் இதுதான். மக்களின் மன நிலையை அறியாமல், தாங்கள் ‘கற்று’அறிந்ததைத்தான் அனுபவம் உள்ள வாக்காளர்களும் நினைப்பார்கள் என விடாப்பிடியாகக் கணக்கு போட்டால், கணிப்புச் சறுக்கல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.... இவர்களும் தங்கள் சறுக்கலுக்கு சாக்கு சொல்லிக் கொண்டேதான் இருக்க வேண்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in