

வட மாநிலங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக கடந்த வாரம் மத்திய அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதை எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தின் உட்புறத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் நாடாளுமன்ற வெளிப் புறத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க மத்திய உள் துறை அமைச்சகம் திட்டமிட்டுள் ளது. இதற்காக டெல்லி போலீஸாருடன் ஆலோசனை செய்த உள்துறை அமைச்சகம், நாடாளுமன்றத்தின் வெளிப்புற சாலைகளில் மிகவும் சக்திவாய்ந்த நவீன சுழலும் கண்காணிப்பு கேம ராக்கள் உடனடியாக அமைக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி காவல்துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “நாடாளு மன்றத்தின் வெளிப்புற சாலைகளில் 360 டிகிரி கோணத்திலும் சுழலும் வகையிலான கேமராக்கள் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது. தற்போது தீவிரவாத எச்சரிக்கை காரணமாக உடனடியாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் தற் போதைக்கு வெளிநாட்டு தனியார் நிறுவனங்களிடம் வாடகைக்கு எடுக்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் இறுதி வரை அல்லது அரசு சார்பில் புதிய கேமராக்கள் வாங்கப்படும் வரை வாடகை கேமராக்கள் செயல்படும். இவற்றுக்கான கண்காணிப்பு அறை, டெல்லி காவல்துறை அலுவலகத்திலும் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தனர்.
இந்த வகை நவீன கேமராக்கள் மழை, புழுதி, வெயில், பலத்த காற்று ஆகியவற்றால் பாதிக்கப் படாத வகையில் இருக்கும். சுழலும் வகையில் செயல்படும் இந்த கேமராக்கள் மூலம் சந்தேகத் திற்கிடமான ஆட்கள் நடமாட்டத்தின் போது, அதை நெருக்கமாக ஆராய முடியும். இவற்றின் பதிவுகளை ஆராயும்போது, குற்றங்களை எளிதாகக் கண்டுபிடிக்கும் வகையில் தெளிவானப் படங்களை உகந்த நிறங்களில் நாம் எடுக்க முடியும்.
பகல், இரவு என இருவகை செயல்பாடுகளை கொண்ட இந்த கேமராக்கள் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் முக்கிய இடங்களில் அமைக்கப்படும். இதற்காக மொத்தம் 39 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.