

இந்திய துணைத் தூதர் தேவயானிக்கு வழங்கப்பட்டுள்ள தூதரக ரீதியிலான சட்டப் பாதுகாப்பை விலக்கிக்கொள்ளுமாறு இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், அதற்கு இந்தியா மறுத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு தேவயானி இந்தியா திரும்பினார்.
இதற்கிடையே, இந்திய துணைத் தூதர் தேவயானி மீதான விசா மோசடி வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் நியூயார்க் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே, தனது வீட்டுப் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸுக்கு குறைவான ஊதியம் அளித்தார்; விசா மோசடி செய்துள்ளார் என்ற புகாரின் பேரில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பெண் தூதரை மிகவும் மோசமாக நடத்திய அமெரிக்க அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. தேவயானியின் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. ஆனால், அதை அமெரிக்கா நிராகரித்தது.
தேவயானிக்கு தூதரக ரீதியான சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில், அவரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியத் தூதரக அலுவலகத்துக்கு பணியிடமாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
அதை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்ததைத் தொடர்ந்து, அவருக்கு சட்டப் பாதுகாப்பு கிடைத்தது. ஆனால், குற்றம் நிகழ்ந்தபோது தேவயானிக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை. எனவே, அந்த வழக்கு விசாரணையை தேவயானி எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், அமெரிக்க சட்டப்படி, வழக்கில் ஒருவரை கைது செய்த பின்பு, 30 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால், அதற்கான பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டது. ஜனவரி 13-ம் தேதிக்குள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டியுள்ள நிலையில், அரசுத் தரப்பு வழக்கறிஞருடன் தேவயானி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதோடு, குற்றச்சாட்டு பதிவு செய்வதை மேலும் 30 நாள்களுக்கு தள்ளிவைக்குமாறு கோரப்பட்டது. ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை.
குற்றச்சாட்டுகள் பதிவு
இந்நிலையில், விசா மோசடி வழக்கு, பணிப்பெண் சங்கீதாவுக்கு விசா கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில் ஊதியம் தொடர்பாக தவறான தகவலை அளித்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் தேவயானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட நீதிபதி ஷிரா செயிண்ட்லினுக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரீத் பராரா எழுதிய கடிதத்தில், “சட்டப் பாதுகாப்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து தேவயானி கோப்ரகடே இப்போது அமெரிக்காவிலிருந்து வெளியேறி விட்டார். ஆனால், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நிலுவையில் இருக்கும். அவர் அமெரிக்கா திரும்பி வரும்போது, தூதரக ரீதியான சட்டப் பாதுகாப்பை பெறாமல் இருந்தால், நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டாக வேண்டும்” என்று தெரிவித்தார்.
தேவயானி பேட்டி
இதற்கிடையே வியாழக்கிழமை இரவு இந்தியாவுக்கு புறப்படும்போது விமான நிலையம் செல்லும் வழியில் பி.டி.ஐ. செய்தியாளரிடம் தேவயானி கூறியதாவது: “என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இது பொய் குற்றச்சாட்டு என்பதை சட்டப்படி வழக்கை எதிர்கொண்டு நிரூபிப்பேன்” என்றார்.
முன்னதாக தேவயானிக்கு தூதரக ரீதியிலான முழு அளவிலான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்கு ஜனவரி 8-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் வழங்கியது. இதைத் தொடர்ந்து ஜனவரி 9-ம் தேதி இந்திய அரசை தொடர்பு கொண்ட அமெரிக்கா, தேவயானிக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பாதுகாப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியது. ஆனால், அதை இந்தியா நிராகரித்தது.
சட்டப் பாதுகாப்பு அமலில் இருப்பதால், தேவயானிக்கு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. அவரால் இந்தியாவுக்கு திரும்பிவர முடிந்துள்ளது.