

ராகுல் காந்திக்கு நிகர் ராகுல் காந்திதான். அவருடன் ஒப்பிடும்போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் பூஜ்யம் என்றார் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் அண்மை யில் ஏற்பட்ட வகுப்பு கலவரத்தில் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆறுதல் சொன்ன லாலு, நிருபர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியுடன் ஒப்பிடும்போது கேஜ்ரிவாலும் மோடியும் பூஜ்யம். ராகுலுக்கு நிகர் ராகுல்தான். பத்திரிகை யாளர்களாகிய நீங்கள்தான் இருவரையும் உச்சாங்கிளையில் வைத்து விட்டீர்கள். பெரிய அளவில் பிரபலப்படுத்தி விட்டீர்கள். இருவரும் என்ன செய்துவிட்டார்கள்.?
கார்களில் சுழல் விளக்கு கூடாது, அமைச்சர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடையாது என்றெல்லாம் கூறி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நாடகம் ஆடுகிறது.
ஊழலை ஒழிப்போம் என ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது.ஆனால் அந்த கட்சியில் உள்ளவர்களே ஊழல் பேர்வழிகள்தான்.
மோடி, அமீத் ஷா மீது தாக்கு
நரேந்திர மோடிக்கு இடதுகரமாக விளங்கும் அமீத் ஷா சமூகத்தில் வகுப்புவாதத்தை பரப்புவதற்காக மோடியின் பொது மேலாளராக செயல்படுகிறார். நல்ல சூழலை கெடுத்து வருகிறார் ஷா.
கலவரம் என்றாலே ஆர்.எஸ்.எஸ், மோடி, அமித் ஷா ஆகியோர்தான் வித்திடுபவர்கள். கட்சியின் தேர்தல் பிரசாரத்துக்கு பொறுப்பேற்க அமித் ஷா அனுப்பப்பட்ட பிறகே உத்தரப் பிரதேசத்தில் வகுப்புக் கலவரம் மூண்டது. தேசத்தின் துரோகி பாஜக. நாங்கள் பாஜகவுக்கு துரோகி.
காங்கிரஸுடன் கூட்டணி
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி வைக்கும்.
முசாபர்நகரில் நடந்த வகுப்புக் கலவரத்துக்கு பாஜகவும் ஆளும் சமாஜ்வாதி கட்சியுமே காரணம். முகாம்களில் உள்ளவர்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்ப வேண்டும்.ஆரம்பத்திலேயே முகாம்களில் உள்ளவர்கள் மீது கவனம் செலுத்தி இருந்தால் நிலைமை சீரடை ந்திருக்கும் என்றார் லாலு.
வகுப்புக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் முகாம்களில் இல்லை, அவர்கள் அனைவருமே கட்சிகளைச் சேர்ந் தவர்கள் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு 'அதைக் கேட்கவே வேதனையாக இருக்கிறது' என்றார் லாலு. முகாம்களில் இருப்பவர் கள் பலவந்தமாக வெளியேற்றப்ப டுவதாக கூறப்படுவது பற்றி கேட்ட தற்கு 'அப்படி நடக்கக்கூடாது. அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்' என்றார்.
முன்னதாக, முகாம்களுக்கு சென்ற லாலு கலவரத்தால் பாதிப்புக்குள்ளானவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 'சிறையில் இருந்ததால் தன்னால் முன்னதாக வர இயலவில்லை' என்றார்.
இதனிடையே, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை தொடர்புகொண்டு பேசிய லாலு, லோயி முகாமில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொன்னார்.