

பிரதமர் நரேந்திர மோடி விலைவாசி உயர்வு தவிர அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசுகிறார். ஆனால், பருப்பு விலை எப்போது குறையும் என்ற தேதியை அவர் தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் ராகுல் காந்தி இது தொடர்பாகப் பேசியதாவது:
நீங்கள் (மோடி) விரும்பும் அளவுக்கு வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசலாம். ஆனால், பருப்பு விலை எந்த தேதியில் குறையும் என நீங்கள் சொல்ல வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பருப்பு, தானியங்களின் விலை கூரையைத் தாண்டிவிட்டது. ஆனால், இதன் பயன் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, இமாச்சலப் பிரதேசத்தில் மோடி பேசும்போது, “தாயும் பிள்ளையும் விடிய விடிய அழுகிறார்கள், பின் கண்ணீரைக் குடித்து விட்டு உறங்குகிறார்கள்” என்று பேசினார். என்னவொரு வசனம் அது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். தற்போது அது குறித்து அவர் பேசுவதில்லை; மறந்துவிட்டார். பாஜக அரசு பதவியேற்றால், விலைவாசியைக் குறைப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.
2014-ல் தக்காளியின் விலை கிலோ ரூ.18, 2016-ல் ரூ.55; ரூ.70-க்கு விற்பனையான உளுந்து தற்போது ரூ.160, ரூ.75-க்கு விற்பனையான துவரம்பருப்பு தற்போது ரூ.180க்கு விற்பனையாகிறது.
சந்தையில் ரூ. 75-க்கு துவரம்பருப்பு விற்பனையானபோது, அதற்கு அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 45. ஆனால், தற்போது ரூ.50 ஆதார விலையாக இருக்கும்நிலையில் சந்தையில் ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் இடைவெளி ரூ.130. முந்தைய இடைவெளியோடு ஒப்பிட்டால் எஞ்சிய ரூ.100 எங்கே போகிறது?
தேர்தலின்போது, என்னைக் காவலாளியாக (வாட்ச்மேன்) தேர்ந்தெடுங்கள் என்றார். இப்போது, பருப்புத் திருட்டு அவர் முன்பாகவே நடக்கிறது. ஆனால், காவலாளி ஒரு வார்த்தை கூட பசேவில்லை. அவர் தற்போது பெரிய ஆளாகிவிட்டார். காவலாளி வேலையை காங்கிரஸுக்குக் கொடுங்கள்.
தேர்தலின்போது பாஜகவினர் ஹர் ஹர் மோடி’ என அழைத்தனர். தற்போது மக்கள் அவரை ‘அர்ஹர் மோடி; (பருப்பு மோடி) என அழைக்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது. ஆனால், இந்தக் கொண்டாட்டங்களின்போது விலை உயர்வு பற்றி மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அது ஏன் எனத் தெரியவில்லை.
பெருநிறுவன முதலாளிகளுக்கு ரூ.52 ஆயிரம் கோடி தள்ளுபடி அளித்த மோடி அரசு. கச்சா எண்ணெய் விலை குறைவால் மீதமான ரூ. 2 லட்சம் கோடியில், விவசாயிகளுக்கும் இல்லத்தரசிகளுக்கும் என்ன கொடுத்தது.
மேக் இன் இந்தியா திட்டத்தால் ஒரு இளைஞருக்குக் கூட வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.