

கேரளாவின் முதல் மெட்ரோ ரயில் சேவையை வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, அதில் பயணம் செய்கிறார். இவ்விழா மேடையில் மெட்ரோ மனிதன் என புகழப்படும் பொறியாளர் தரன் அமர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.
கேரளாவின் கொச்சி நகரில் முதல்கட்டமாக 25 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் பலரிவட்டம் மற்றும் அலுவா இடையே 13 கி.மீ தூரத்துக்கான பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, மெட்ரோ ரயிலின் வெள்ளோட்டமும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல் முறையாக கேரளாவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து முதல் ரயிலை இயக்கி வைப்பதுடன், அதில் பயணமும் செய்யவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கான விழா மேடையில் மாநில ஆளுநர் பி.சதாசிவம், மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அமர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்காக அரும்பாடுபட்ட திட்டத்தின் முதன்மை ஆலோசகர் தரன் விழா மேடையில் அமர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, உள்ளூர் எம்.பி.யான கே.வி.தாமஸ், எம்எல்ஏ பி.டி.தாமஸ் ஆகியோருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இதுகுறித்து பி.டி.தாமஸ் கூறும்போது, ‘‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொச்சி மெட்ரோ ரயிலுக்காக அடிக்கல் நாட்டியபோது விழா மேடையில் அனைவருக்கும் இடம் அளிக்கப் பட்டது. தற்போது மறுக்கப்படுவது பாஜகவின் அகந்தையை காட்டுகிறது. மெட்ரோ ரயில் கேரளாவின் கனவுத் திட்டமாகும்.
இதற்காக அயராது பாடு பட்டவர்களைப் பார்வையாளர் கள் மாடத்தில் அமரச் சொல்வதில் எந்த நியாயமுமில்லை’’ என்றார்.