

ஃபேஸ்புக்கை அடுத்து வீடியோ பகிர்வுத் தளமான யூடியூபிலும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்கான பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் மூலம் லட்சகணக்கான மக்களை நேரடியாகச் சென்றடைந்ததை அடுத்து, இஸ்ரோ, யூடியூப் தளத்தில் தனக்கான பக்கத்தைத் துவக்கவுள்ளது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷணன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியது தொடர்பாக மங்கள்யான் திட்டத்துக்கான ஃபேஸ்புக்கின் மூலம் எங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால், யூடியூப் தளத்தின் மூலம் மக்களை இன்னும் சிறப்பாகச் சென்றடைய முடியும் என முடிவெடுத்துள்ளோம்.
இளையத் தலைமுறையினர் விண்வெளி ஆராய்ச்சி மையம் பற்றிய தகவல்களை, சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். ஆரோக்கியமான விவாதங்கள் அங்கு நடக்கின்றன. பெரும்பாலனவர்கள் 18-24 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர்" என்றார்.
மங்கள்யான் விண்ணில் ஏவப்பட்ட சமயத்தில், அந்தத் திட்டத்தைப் பற்றிய சுருக்கத்தை இஸ்ரோ அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது. தொடர்ந்து அந்தத் திட்டத்தின் வளர்ச்சி குறித்து தகவல்கள் பகிரப்பட்டன. மங்கள்யானுக்காக துவக்கப்பட்ட பக்கத்தை 3 லட்சம் பேர் தொடர்கிறார்கள். ஜி.எஸ்.எல்.வி பக்கத்தை இதுவரை 39,000 பேர் தொடர்ந்துள்ளனர். இஸ்ரோவின் ட்விட்டர் கணக்கையும் பல்லாயிரம் பேர் தொடர்ந்து வருகின்றனர் என மத்திய இணை அமைச்சர் நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.