

ஆந்திரப்பிரதேசத்தை பிரித்து தெலங்கானா மாநிலம் அமைப்பது என மத்திய அரசு எடுத்துள்ள முடிவைக் கண்டித்து அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி டெல்லியில் புதன்கிழமை தர்ணா நடத்தினார்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்குவதற்கு முன், ராஜ்காட் சென்று அஞ்சலி செலுத்தினார் ரெட்டி. தெலங்கானா மசோதாவை நிறைவேற்றுவது என்பதில் மத்திய அரசு மிகுந்த ஆர்வமாக இருக்கிறது.
இந்நிலையில், நாடாளு மன்றத்தின் நீட்டிக்கப் பட்ட குளிர்கால கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கிய சூழலில் தனது தெலங்கானா எதிர்ப்பு போராட்டத்தை முதல்வர் கிரண்குமார் ரெட்டி, டெல்லி வரை கொண்டு வந்துள்ளார்.
போராட்ட மேடையில் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் அமர்ந்தனர். பல்லம் ராஜு, கே.சாம்பசிவ ராவ், டி.புரந்தேஸ்வரி, கிள்ளி கிருபாராணி ஆகிய மத்திய அமைச்சர்களும் முதல்வரைச் சந்தித்து அவருடன் சிறிது நேரம் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்ட பிறகு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநிலம் பிரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மாநிலத்தை பிரிக்காதவாறு பார்த்துக் கொள்ளும்படி குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்தோம். ஆந்திரம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.
மாநிலத்தின் 80 சதவீதம் பேர் ஆந்திரம் ஒன்றுபட்டு இருப்பதையே விரும்புகிறார்கள், பிரிக்கும் நடவடிக்கையை நிராகரித்து சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானம் அந்த மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாகும். மாநிலத்தைப் பிரித்தால் அது அந்த பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். மாறாக, இந்த நடவடிக்கை மோசமடையவே செய்யும் என்றார்.