

இந்திய சுற்றுலாத் துறை சார்ந்த 'வியக்கத்தக்க இந்தியா' என்ற பிரச்சாரத்தில் பிரபல இந்தி நடிகர் ஆமிர் இனி இடம்பெற மாட்டார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தி நடிகர் ஆமிர் கான் சமீபத்தில் நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து விட்டதாகக் கூறியிருந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதை வலுப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியின் கண்டனமும் அமைந்துள்ளது.
ஆமீர் 'விடுவிப்பு'
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறும்போது, "நமது சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்தும் நோக்கில் வியக்கத்தக்க இந்தியா (incredible india) என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக ரூ.2.96 கோடிக்கு மெக்கான் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.
அந்த நிறுவனம்தான் ஆமிர் கானை இந்தப் பிரச்சாரத்தில் விளம்பர தூதராக ஈடுபடுத்தி வந்தது. இப்போது மெக்கான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது. இதன் மூலம் ஆமிர் கானும் இனி பிரச்சாரத்தில் இடம் பெற மாட்டார்" என்றார்.
என்ன சொல்கிறது மெக்கான்?
இதுகுறித்து மெக்கான் நிறுவனத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி கூறும்போது, "வியக்கத்தக்க இந்தியா பிரச்சாரத்துக்காக இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தோம். இதற்கு ஆமிர் கான் ஆதரவு வழங்கி வந்தார். ஒப்பந்தம் இப்போது முடிந்துவிட்டது" என்றார்.
இதற்கிடையே, சுற்றுலாத் துறை தொடர்பான புதிய விளம்பரத்தை வெளியிட முடிவு செய்தால், புதிதாக டெண்டர் கோரப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரத்தில், இந்தப் பிரச்சாரத்துக்காக ஆமிர் மீண்டும் நியமிக்கப்பட மாட்டார் என்றும், புதிய முகம் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதான் பின்னணியா?
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆமிர் கான், நாட்டில் சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாகக் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வியக்கத்தக்க இந்தியா பிரச்சாரத்திலிருந்து ஆமிர் நீக்கப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால் மத்திய அரசு இதை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கண்டனம்
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறும்போது, "பிரபல நடிகர் ஆமிர் கானை விளம்பரத் தூதராகக் கொண்ட வியக்கத்தக்க இந்தியா பிரச்சாரத்துக்கான ஒப்பந்தம் முடிந்த நிலையில் அதை மத்திய அரசு புதுப்பிக்காதது கண்டிக்கத்தக்கது.
இது மோடி தலைமையிலான அரசின் குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. மாற்று கருத்துகளை தெரிவிக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் என யாராக இருந்தாலும் அவர்களை மோடி அரசு புறக்கணிக்கிறது" என்றார்.
இதுதான் ஆமீர் கானின் பதில்:
இந்த நிலையில், ஆமீர் கான் வெளியிட்ட விளக்கத்தில், "கடந்த 10 ஆண்டுகளாக ‘வியக்கத்தக்க இந்தியா’ பிரச்சாரத்தின் விளம்பர தூதராக சேவையாற்றியது சிறந்த கவுரவத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. நாட்டுக்கு சேவையாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன் இதற்காக எப்போதும் நான் காத்திருக்கிறேன்.
நான் இதுவரை தயாரித்த பொதுச்சேவை திரைப்படங்கள் அனைத்துக்கும் நான் செலவு எதையும் மேற்கொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாட்டுக்கு சேவையாற்றுவதை பெரிய கவுரவமாகவே கருதுகிறேன், எப்போதும் அப்படியே கருதுவேன்.
எந்த ஒரு பிரச்சாரத்துக்கும் விளம்பர தூதர் வேண்டுமா, அப்படி வேண்டுமெனில் யார் தூதராக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது அரசின் தனிப்பட்ட சிறப்புரிமையாகும். எனது சேவையை தொடர வேண்டாம் என்ற அரசின் முடிவை நான் மதிக்கிறேன்.
நாட்டுக்கு சிறந்தது எது என்பதைச் செய்வதற்கு அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் விளம்பர தூதராக இருக்கிறேனோ அல்லது இல்லையோ இந்தியா எப்பவுமே வியக்கத்தக்கதுதான், அது அப்படித்தான் இருக்க வேண்டும்" என்று ஆமீர் கான் கூறியுள்ளார்.