

இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராக நியமிக்க வேண்டும் என பாஜக கூட்டணிக் கட்சியான சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
சிவசேனாவின் சாம்னா நாளேட்டில் வெளியான தலையங் கத்தில் கூறியிருப்பதாவது:
இதுவரை மதச்சார்பற்றவர்கள் குடியரசுத் தலைவராக பதவி வகித்துள்ளனர். இப்போது, ராமர் கோயில், பொது சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்குவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராக நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக உள்ள மோகன் பாகவத்தை (66) அடுத்த குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்று சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், இதில் தமக்கு விருப்பம் இல்லை என பாகவத் தெரிவித்திருந்தார்.
பாஜகவின் நீண்டகால கூட்டணிக் கட்சியாக சிவசேனா இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது குறை கூறி வருகிறது.
ஆனாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தாங்கள் நியமிக்கும் வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு அளிக்கும் என பாஜக கருதுகிறது. இக்கட்சிக்கு 18 எம்.பி.க்கள் மற்றும் 63 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால், இந்தத் தேர்தலில் தனித்து முடிவு எடுக்கப்படும் என சிவசேனா தெரிவித்துள்ளது.
அதேநேரம், கடந்த 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளித்தது.
இதுபோல, 2007 தேர்தலில் பாஜக வேட்பாளரான பைரோன் சிங் செகாவத்தை சிவசேனா ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் பிரதிபா பாட்டீலை (மும்பையைச் சேர்ந்தவர்) ஆதரித்தது.