மத்தியில் இதுவரை எந்த அரசும் இத்தகைய பேரன்பை பெற்றதில்லை: மோடி பெருமிதம்

மத்தியில் இதுவரை எந்த அரசும் இத்தகைய பேரன்பை பெற்றதில்லை: மோடி பெருமிதம்
Updated on
1 min read

மத்தியில் இதுவரை ஆட்சி செலுத்திய எந்த அரசுக்கும் தற்போதைய பாஜக தலைமையிலான அரசுக்கு கிடைத்த அளவு மக்களின் பேரன்பு கிடைத்ததில்லை என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பாஜக அரசின் இரண்டாண்டு நிறைவு விழாவை ஒட்டி ஒடிசா மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இவ்வாறு பேசினார்.

அவர் பேசியதாவது:

"இன்றைக்கு இங்கு தேர்தல் பிரச்சாரம் ஏதும் நடக்கவில்லை. போராட்டமும் நடைபெறவில்லை. ஆனாலும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இத்தனை கூட்டம் இங்கே குவிந்துள்ளது. இந்தக் கூட்டம் மத்திய அரசின் மீது மக்கள் கொண்டுள்ள பேரன்பின் அடையாளம். இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டு துவங்கியுள்ள நிலையில் மக்கள் மத்திய அரசின் மீது இந்த அளவு அன்பு கொண்டிருக்க காரணம் அனவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையுடன் நாங்கள் இயங்குவதே ஆகும்.

இதற்கு முன்னர் மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகள் எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் மட்டுமே காரணம் எனக் கூறி வந்தன. ஆனால், பாஜக அரசு நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் அவசியம் எனக் கருதுகிறது.

மேலும், பாஜக அரசு ஏழைகளின் அரசு. வறுமையை ஒழிக்க சிறப்புத் திட்டங்களை இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மாநில அரசுகளும் ஏழை மக்கள் நலனை முன்வைத்தே அனைத்து திட்டங்களையும் வகுக்க வேண்டும். இந்த நாட்டின் எந்த ஒரு மாநிலமும் வளர்ச்சி அடையாமல் இருக்கக் கூடாது என்பதே எங்கள் லட்சியம். வளர்ச்சியின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும்."

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in