

காலிஸ்தான் தீவிரவாதி தேவேந்திரபால் சிங் புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.
கடந்த 1993-ல் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி தேவேந்திரபால் சிங் புல்லருக்கு 2001-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றமும் அவரது தண்டனையை உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டில் அவர் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த காலதாமதத்தைக் காரணம் காட்டி புல்லரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி அவரது மனைவி நவ்னீத் கவுர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். புல்லர் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம், ஆர்.எம்.லோதா, எச்.எல்.டத்து, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதித்தனர். மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். மனச் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ள புல்லர், ஐஎச்பிஏஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, அந்த மருத்துவமனை ஒரு வாரத்துக்குள் புல்லரின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.