புரூனை, இந்தோனேசியாவில் மன்மோகன் சிங் 4 நாள் பயணம்

புரூனை, இந்தோனேசியாவில் மன்மோகன் சிங் 4 நாள் பயணம்
Updated on
2 min read

இந்தோனேசியா, புரூனை ஆகிய நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை பயணமாக புறப்பட்டுச் சென்ற பிரதமர் மன்மோகன், புதன்கிழமை புரூனை சென்றடைந்தார்.

11-வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு மற்றும் 8-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவை புரூனையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் புதன்கிழமை புரூனை சென்றடைந்தார்.

பிரதமருடன் அவரது மனைவி குர்சரண் கவுர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

வெளிநாட்டு பயணத்துக்கு முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:

இந்தோனேசியாவும், புரூனை யும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் முக்கிய பங்கு தாரர்கள் ஆவர். 10 நாடுகளை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (ஆசியான்) உறுப்பு நாடுகளுடனான உறவை மேம்படுத்த இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தை வளப்படுத்தவும், அமைதியை ஏற்படுத்தவும், ஸ்திரத்தன்மையை உருவாக்கவும் இந்தியா உறுதி பூண்டுள்ளது. இந்த முயற்சிக்கு தென்கிழக்கு ஆசிய நாடுகள் பங்காற்றி வருகின்றன. இந்த முயற்சியை மேலும் பலப்படுத்த இந்தப் பயணம் உதவும்.

இதுதவிர, இந்தப் பயணத்தின்போது, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்தும் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

கடந்த சில மாதங்களாக ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய் வதற்கு இந்தப் பயணம் உதவும் என்றார் மன்மோகன் சிங்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் இந்தியா-ஆசியான் இடையே, சேவை மற்றும் முதலீடு தொடர்பாக தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த உடன்பாட்டுக்குப் பிறகு முதன்முறையாக பிரதமர் மன்மோகன் சிங் புரூனையில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து இந்தோ னேசியா புறப்பட்டுச் செல்கிறார்.

இந்தியா-ஆசியான் இடையே, பொருள்கள் தொடர்பான தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.

இதன்படி இருதரப்பு வர்த்தகம் இப்போது 7,600 கோடி டாலராக உள்ளது. இதை 2015-ல் 10,000 கோடி டாலராகவும், 2022-ல் 20,000 கோடி டாலராகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புரூனை, கம்போடியா, இந்தோ னேசியா, மலேசியா, மியான்மர், லாவோஸ், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியத்நாம் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் மற்றும் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், கொரியா, நியூசிலாந்து, ரஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிகாரில் நாளந்தா பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in