Last Updated : 17 Sep, 2013 04:34 PM

 

Published : 17 Sep 2013 04:34 PM
Last Updated : 17 Sep 2013 04:34 PM

மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கைகளை ஒழிக்க அவசரச் சட்டம்

பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 135 வது பிறந்த தினம் நினைவுகூறும் வேளையில், மூடநம்பிக்கைக்கு எதிரான முக்கியச் சட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது மகாராஷ்டிர அரசு.

மகாராஷ்டிர மாநிலத்தில், பெற்ற சிசுவையே பலி கொடுக்குமளவுக்கு மூடநம்பிக்கை பழக்கங்கள் இன்னமும்கூட நீடிக்கின்றன. ஏவல் , பில்லி, சூனியம் உள்ளிட்ட பகுத்தறிவுக்கு சவால்விடும் சமாச்சாரங்களை எதிர்த்து அங்கேயும் ஒரு பெரியார் குரல் கொடுத்தார். அவர்தான் நரேந்திர தபோல்கர். பாவிகள், அவரையும் கடந்த மாதம் படுகொலை செய்துவிட்டனர். மூடநம்பிக்கைகளை வேரறுக்க கடுமையான சட்டம் தேவை என தபோல்கர் 15 ஆண்டுகளாக போராடினார். அவர் காலத்தில் அது நடக்கவில்லை. அவரது படுகொலைக்குப் பிறகு அத்தகையச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த அவசரச் சட்டம், பில்லி சூனியம், நரபலி மற்றும் பிற மனிதநேயமற்ற பழக்கங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 768 பேர் மூடநம்பிக்கைகளுக்கு தங்களின் இன்னுயிரை இழந்திருப்பதாகச் சொல்கிறது ஒரு கள ஆய்வு! இந்துக்கள் மட்டுமல்ல பிற மதத்துக்காரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்கிற தகவலையும் தருகிறது அந்த ஆய்வறிக்கை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, சேலம் ஆத்தூரில் குறி சொல்லும் ஒரு பெண் தன்னுடைய வாக்கு பலிப்பதாக மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக ஏழு குழந்தைகளைக் கொன்ற சம்பவம் நடந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, மதுரையில் முஸ்லிம் ஒருவர், கடன் தொல்லையிலிருந்து மீள்வதற்காக தலைச்சன் பிள்ளையை கடத்திக் கொண்டு போய் கழுத்தறுத்த சம்பவம் நடந்தது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில், பாட்டியே பேத்தியை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றது கூட மூடநம்பிக்கையின் உச்சம்தான்! போலி மந்திரவாதிகளின் மாந்திரீக வித்தைகளுக்கு ஆடும் மூடபழக்கங்களும் குடுகுடுப்பைக்காரரின் பேச்சை நம்பி குடும்பத்தைப் பிரித்து வைக்கும் கொடுமைகளும் தமிழகத்தில் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழகத்திலும் மூடநம்பிக்கைக்கு எதிரான வலுவான சட்டத்தை கொண்டுவரக் கோரி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ’’மூடநம்பிக்கைகளால் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழை மக்களும்தான் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள். அதுவும் தென் மாவட்டங்களில், உயிருடன் குழந்தையை புதைப்பது, தலையில் தேங்காய் உடைப்பது போன்ற கண்மூடித்தனமான் மூட நம்பிக்கை பழக்கங்கள் அதிகம் உள்ளன. அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது மக்களின் கடமை என்கிறது இந்திய அரசியலமைப்பு சட்டம். மகாராஷ்டிர மாநிலத்தைப் போல தமிழ்நாட்டிலும் சட்டம் கொண்டு வர வேண்டும். அதனால், மூட நம்பிக்கையை முழுமையாக ஒழிக்க முடியாவிட்டாலும், அதுபற்றிய விழிப்புணர்வை உண்டாக்கலாம்’’ என்கிறார் அறிவியல் இயக்கத்தின் மாநில நிர்வாகி உதயன்.

"பொதுவாக, ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தவர்களை சீர்திருத்தம் பேசுபவர்களை எதிர் கொண்டு வெற்றி பெறுவது வைதீகர்களுக்கு எளிது. ஆனால், பெரியார் மூட நம்பிக்கை எதிர்ப்பாளர் மட்டுமல்ல. அவர் கடவுள், ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம் என்ற அனைத்தையும் ஒரே வீச்சில் புறக்கணித்தார். அவருடைய வாழ்க்கையில் அவர் கொண்ட கொள்கைகளுக்கு மாறாக நடந்து கொண்டதில்லை. ஒருவரை வாழ்த்துவதால் அவர் வாழ்வார் என்றோ, சாபம் விடுவதால் அழிந்து விடுவார் என்றோ நம்பவில்லை. வாழும் போதே பெரியாருக்கு சிலை வைக்கப்பட்டது. சிலை வைத்தால் பிற்காலத்தில் வருபவர்கள் தன்னையும் கடவுளாக்கி விடுவார்களோ என்ற எண்ணத்தில் ’கடவுள் இல்லை’ என்று சிலைக்கு கிழே எழுதப்பட வேண்டுமென விரும்பினார். அவருடைய நுட்பமான அறிவையும் ஆய்வும் மிக ஆழமானதென்பது அவருடைய ’தத்துவ விளக்கம்’ நூலை படித்தால் தெரியும். நாளை நடப்பதை அறிவதற்கு ஜோசியம் தேவை யில்லை. மனித வாழ்க்கை வளர்ச்சியின் வேகத்தை பார்த்தாலே ’இனி வரும் உலகம்’ எப்படி இருக்கும் என்ற கூற முடியும் " என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி,

வடநாட்டு பெரியார் நரேந்திர தபோல்கரின் மரணம் மிகப் பெரிய அவமானம். மதவாத, சாதிய சக்திகள் வளர்ந்து வரும் நிலையில், பெரியார் கருத்துகளின் தாக்கம் வலிமையாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டை மூடப்பழக்கங்களிலிருந்து மீட்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x