

பெங்களூருவில் வரும் 14-ம் தேதி சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் 51 நாடுகளைச் சேர்ந்த அதிநவீன போர் விமானங்கள் இடம்பெறுகின்றன.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் ‘ஏரோ இந்தியா 2017’ என்ற பெயரில் வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதனை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தொடங்கி வைக்கிறார். கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையேற்கிறார்.
விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையின் முக்கிய போர் விமானங்கள், கனரக மற்றும் இலகு ரக விமானங்கள் காட்சிக்காக வைக்கப்படவுள்ளன. சாரங், சூரிய கிரண் ஆகிய விமானப் படை அணிகளின் சாகச நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தவிர அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல், ஜெர்மனி, பெல்ஜியம் உட்பட 51 நாடுகளின் அதிநவீன போர் விமானங்களும் கண்காட்சியில் இடம்பெறவுள்ளது.
விமான தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், கர்நாடக அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியை யொட்டி பெங்களூருவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.