

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வைகுண்டம் க்யூ வரிசையில் காத்திருந்த ஆந்திர பக்தரை பாதுகாவலர்கள் பலமாக தாக்கியதில் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சிறப்பு பாதுகாப்பு படை வீரர் உட்பட தேவஸ்தான ஊழியர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபம் (58). இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருமலைக்கு வந்தார். பின்னர் சுவாமி தரிசனம் செய்வதற்காக பத்மநாபம் குடும்பத்தினர் வைகுண்டம் க்யூ காம்பளக்ஸில் உள்ள சர்வ தரிசன வழியில் சென்றனர். கோயில் முகப்பு கோபுரம் அமைந்திருக்கும் பகுதி அருகே உடைமைகளை ஸ்கேன் செய்யும் இடத்தில் பத்மநாபத்தை பாது காவலர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் பத்மநாபம் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் ஆத்திர மடைந்த பாதுகாவலரும், ஊழியர்களும், பத்மநாபத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த பத்மநாபம் உடனடியாக திருமலையில் உள்ள அஸ்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி யில் உள்ள தேவஸ்தான மருத் துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி பத்மநாபம் உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மநாபத்தின் மகன் ராம் பாது காவலர் மற்றும் தேவஸ்தான ஊழியர்களுக்கு எதிராக திருமலை முதலாவது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறப்பு பாதுகாப்புப் படை வீரரையும், 4 தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்களையும் கைது செய்த னர். திருமலையில் நடந்த இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.