

பிரதமர் மன்மோகன் சிங்கை, பாரதிய ஜனதா கட்சி கேலிக்கு உள்ளாக்குவதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் மன்மோகன் சிங்குக்குப் பின்னால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகம் மாநிலம் மாண்டியாவில் இன்று (திங்கள்கிழமை) நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டப் பேரணியில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி, “அவர்கள் (பாஜக), எங்களது சாதனைகளை இழிவுபடுத்துகிறார்கள். எங்களது கட்சியையும் எங்களது பிரதமரையும் கேலிக்கு உள்ளாக்குகிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கீழ்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எல்லா சாதனைகளையும் செய்திருக்கிறது” என்றார்.
குற்றம் செய்து தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யாமல் காக்கும் அவரசச் சட்டத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அந்த அவசரச் சட்டத்தை விலக்கிக் கொள்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மன்மோகன் சிங்கைத் தாண்டி, ராகுல் காந்தியிடம் அதிகாரம் மிகுந்திருப்பதாக பாஜக தலைவர்களும், அதன் பிரதமர் வேட்பாளர் மோடியும் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்களுக்குப் பதில் அளிக்கும் வகையிலேயே, சோனியா காந்தி இவ்வாறு பேசியிருக்கிறார்.
மேலும், பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாகவே, ராகுல் அவசரச் சட்டத்தை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளியிட்டதாக குற்றம்சாட்டப்படுவதையும் அவர் மறுத்தார்.
“நாங்கள் பாஜகவுக்கும், வேறு எந்த எதிர்கட்சிகளுக்கும் அச்சப்படவில்லை. அவர்களது தாக்குதல்களுக்கு பயப்படவில்லை. எங்கள் வழியில் தொடர்ந்து முழு ஈடுபாட்டுடன் நடப்போம். பாஜகதான் மக்களைப் பிரிக்கிறது. நாங்கள் மக்களை ஒன்றிணைக்கிறோம். லட்சக்கணக்கான மக்களின் வறுமையை காங்கிரஸ் தவிர வேறு எந்த அரசும் போக்கவில்லை. நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்” என்றார் சோனியா காந்தி.