

வரும் மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக உயர் பதவி வகித்த அரசியல்வாதிகள் அதிக அளவில் போட்டியிடுகின்றனர். இதில் ஒரு முன்னாள் பிரதமர், ஒரு முதல்வர் மற்றும் 24 முன்னாள் முதல்வர்களும் இடம் பெற்றுள்ளனர்.
அதிகமானவர்கள் இடம் பெற்ற மாநிலமாக கர்நாடகா முதலிடம் பெறுகிறது. இதன் ஹசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா போட்டியிடுகிறார். மூன்றாவது அணி சார்பில் பிரதமராக இருந்தவர் இவர். இவரது மகன் ஹெச்.டி.குமாரசாமி, இதே மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்.
இவர் சிக்பால்பூர் தொகுதியில், மற்றொரு முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லியை எதிர்த்து போட்டியிடு கிறார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் களான பி.எஸ்.எடியூரப்பா, டி.வி.சதானந்த கவுடா மற்றும் எம்பியான தரம்சிங் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக, உபி மாநிலத்தில் நான்கு முன்னாள் முதல்வர்கள் போட்டியிடுகிறார்கள். உபியின் ராஜ்நாத்சிங், முலாயம்சிங் மற்றும் ஜெகதாம்பிகாபால், டெல்லியின் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மபியின் உமாபாரதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
குஜராத்தின் இப்போதைய முதல்வரான நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதரா மற்றும் உபியின் வாரணாசி என இரு இடங்களில் போட்டியிடுகிறார்.
பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் ராப்ரிதேவி, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ராம் சுந்தர்தாஸ் ஆகிய இரு முன்னாள் முதல்வர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் அதிக வயதுடையவர் ராம் சுந்தர்தாஸ் (90) ஆவார்.
பஞ்சாப் மற்றும் கோவாவின் முன்னாள் முதல்வர்களான கேப்டன் அம்ரீந்தர் சிங் (காங் கிரஸ்) மற்றும் சர்ச்சில் அல்மாவ் (திரிணமூல் காங்கிரஸ்) ஆகியோர் போட்டியில் உள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் இரண்டு முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி) மற்றும் குலாம்நபி ஆசாத் (காங்கிரஸ்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர்களான மேஜர் ஜெனரல் பி.சி.கந்தூரி, பகத்சிங் கோஷியாரி மற்றும் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்கள்.
ஜார்க்கண்டில் அதன் இரு முன்னாள் முதல்வர்களான பாபு லால் மராண்டி ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சாவிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் சிபு சோரனும் போட்டியிடு கிறார்கள்.
மேலும் முன்னாள் முதல் அமைச்சர்களான ஒடிசாவின் கிரிதர் கொமாங்கோ, மகராஷ் டிராவின் அசோக் சவான் மற்றும் குஜராத்தின் சங்கர் சிங் வகேலா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியில் உள்ளனர்.
இவர்களுடன், ஆந்திர முன் னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு தம் தெலுங்குதேசம் கட்சி சார்பில் சட்டசபை மற்றும் மக்களவை ஆகிய இரு தேர்தல்களிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.