Published : 26 May 2017 07:11 PM
Last Updated : 26 May 2017 07:11 PM

நாடு முழுவதும் இறைச்சிக்காக பசுக்களை விற்கவும், வாங்கவும் தடை: மத்திய அரசு அறிவிப்பு

கால்நடை சந்தைகளில் பசு, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக கொல்வதற்கு விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

சந்தைகளில் விற்கப்படும் கால்நடைகள் குறித்து உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில் கால்நடைகள் விற்பனைக்கு கட்டுப் பாடுகள் தயாரிக்கப்பட்டன. அவற் றுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த அனில் மாதவ் தவே கடந்த வாரம் காலமாவதற்கு முன்பு ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து விலங்குகள் வதை தடுப்பு சட்டத் திருத்தங்களின் கீழ் மத்திய சுற்றுச்சூழல் துறை நேற்று கால்நடைகள் விற்பனைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து 8 பக்க அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கால்நடை சந்தைகளில், பசு, காளைகளை இறைச்சிக்காக கொல்வதற்கு விற்கக் கூடாது. விவசாய நிலங்கள் வைத் திருக்கும் விவசாயிகள் மட்டும்தான், சந்தைகளில் கால்நடைகளை விற்க முடியும். விவசாயப் பயன்பாட்டுக்கு மட்டும்தான் விற்கவும் வாங்கவும் முடியும். பசு, காளை, எருமை, கன்றுக் குட்டி, கறவை மாடுகள், ஒட்டகம் உட்பட அனைத்து கால்நடைகள் விற்பனைக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும்.

மேலும் நாட்டின் சர்வதேச எல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவுக்குள் கால்நடை சந்தை களை அமைக்கக் கூடாது. அதேபோல மாநில எல்லையில் இருந்து 25 கி.மீ. தொலைவுக்குள் கால்நடை சந்தை அமைக்க கூடாது. மாநிலங்களுக்கு வெளியில் கால்நடைகளை கொண்டு செல்வதாக இருந்தால், மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

சந்தைகளுக்கு கால்நடைகளை கொண்டு வருபவர்கள், அவற்றை இறைச்சிக்காக விற்கவில்லை என்பதற் கான உறுதிமொழி சான்றை எழுத்துப் பூர்வமாக அளிக்க வேண்டும். அத்துடன் கால்நடைகளின் அடை யாளங்கள், உரிமையாளரின் புகைப் படத்துடன் கூடிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சந்தைகளில் கால்நடைகளின் நலத்தை உறுதி செய்ய வேண்டும். கன்றுகள், தகுதியில்லாத கால்நடை களை விற்கக் கூடாது. வாகனங்களில் கால்நடைகள் அடைபடாமல் எல்லா வசதிகளுடனும் ஏற்றிச் செல்லப்படு கின்றன என்பதற்கு கால்நடைத் துறை ஆய்வாளரிடம் கட்டாயம் சான்று பெற வேண்டும். விற்பனைக்கு தகுதி இல்லாத கால்நடைகளுக்கு முத்திரை குத்தும் அதிகாரம் ஆய்வாளருக்கு உள்ளது. இனிமேல் மாவட்ட கால்நடை சந்தை கமிட்டியிடம் அனுமதி பெறாமல் கால்நடை சந்தை களை நடத்தக் கூடாது.

இவ்வாறு விதிமுறைகளில் கூறப் பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் லட்சக்கணக் கான ஏழை விவசாயிகளை பாதிக்கும். அத்துடன் நாட்டின் இறைச்சி தொழிற்கூடங்களுக்கு இறைச்சி வரத்து ஸ்தம்பித்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக தலித் மற்றும் முஸ்லிம் வியாபாரிகள், பசு பாதுகாவலர்கள் குழுவினரால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கால்நடை விற்பனைக்கு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் அவர்களை வெகுவாக பாதிக்கும் என்கின்றனர்.

மேலும் வயதான கால்நடைகளை யும், பால் தராத பசுக்களையும் விற்பதன் மூலம் மட்டுமே ஏழை விவசாயிகள் வருவாய் பெறுகின்ற னர். இந்தக் கட்டுப்பாடுகள் அவர்களையும் பெரிதாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் மூலம் கால்நடைகளை விற்க வேண்டு மானால், அதற்கான ஆவணங்களை தயாரிக்க வேண்டியது அவசியம். ஆனால், பெரும்பாலும் விவசாயிகள், ஏழைகள், படிக்காதவர்கள்தான் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆவணங்கள் தயாரிப்பது பெரும் சிக்கலாக இருக்கும். கால்நடைகளை சந்தை களில் விற்பவர், வாங்குபவர் இருவரும் தங்களுடைய நிலத்தின் உரிமை பத்திரம், விவசாயி என்பதற்கான அடையாளச் சான்று போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கால்நடைகளை வாங்கிய பின் அவற்றுக்கான ஆவணங்களின் 5 நகல்களை எடுத்து உள்ளூர் வருவாய் அலுவலர், கால்நடை மருத்துவர், கால்நடை சந்தைகளை நிர்வகித்து வரும் கமிட்டி ஆகியவற்றிடம் சமர்ப்பிக்க வேண்டும். விற்பவர், வாங்குபவர் தலா ஒரு நகலை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு இறைச்சி வர்த்தகம் நடைபெறுவதாக கணக்கிடப் பட்டுள்ளது. இறைச்சி வர்த்தகத்தில் உத்தரபிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்த நிலைகளில் ஆந்திரா, மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஆனால், புதிய கட்டுப்பாடுகளால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x