தானேவில் உணவுப் பொருளை திருடியதாக சிறுவர்களை நிர்வாணப்படுத்தி துன்புறுத்திய இருவர் கைது

தானேவில் உணவுப் பொருளை திருடியதாக சிறுவர்களை நிர்வாணப்படுத்தி துன்புறுத்திய இருவர் கைது
Updated on
1 min read

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உல்சாநகர் பகுதியில் ஒரு கடையிலிருந்து உணவுப் பதார்தத்தைத் திருடியதாக 2 சிறுவர்களுக்கு மொட்டை அடித்து, நிர்வாணப்படுத்தி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "தானே மாவட்டம் உல்சாநகர் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் 7, 8 வயது கொண்ட அந்தச் சிறுவர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் கடை முதலாளியிடம் அனுமதி பெறாமல் அங்கிருந்த உணவுப் பொருளை எடுத்துச் சாப்பிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் முகமது பதான், அவரது மகன் இருவரும் சேர்ந்து அந்தச் சிறுவர்கள் தலையை மொட்டையடித்து, அவர்களை நிர்வாணப்படுத்தி, செருப்பு மாலை அணிவித்து இழுத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளத்திலும் வெளியிட்டனர்.

இதனைப் பார்த்து இணையவாசிகள் கொதித்தெழுந்து முகமது பதானை சரமாரியாக வசை பாடினர். தங்கள் மகன்களுக்கு நேர்ந்த அவலத்தை சமூக வலைதளத்தில் பார்த்த பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். பெற்றோர் புகார் அடிப்படையில் கடை உரிமையாளரையும் அவரது மகனையும் கைது செய்துள்ளோம். அவர்கள் இருவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாயார் கூறும்போது, "எனது மகன்களின் தலையை மொட்டையடித்து அவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர். எனக்கு நீதி வேண்டும். குற்றவாளிகள் சிறைக்குச் செல்ல வேண்டும்" என்றார்.

மூத்த காவல் அதிகாரி மோகன் வாக்மாரே, "சிறுவர்கள் இருவரும் அடிக்கடி இதேபோல் கடையில் இருந்து உணவுப் பொருளைத் திருடியதாலேயே அவர்களுக்கு இத்தகைய தண்டனை கொடுத்ததாக கடை உரிமையாளர் கூறியுள்ளார். கடை உரிமையாளரையும் அவரது மகனையும் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். இன்னும் பிற இந்திய தண்டனைச் சட்டங்களின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in