

அருணாசலப் பிரதேச மாநிலத்தின் எல்லைப் பகுதியில் 2 ஆயிரம் கி.மீ. தூர சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
இந்திய எல்லையையொட்டி உள்ள சீனப் பகுதியில் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளன. அதற்கு இணையாக இந்திய எல்லைப் பகுதியிலும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அருணாசலப் பிரதேசத்தின் எல்லையில் தவாங்கில் உள்ள மாகோ திங்பூவிலிருந்து சங்லாங்க் மாவட்டத்தில் உள்ள விஜய்நகர் வரை சாலை வசதியை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
“எல்லையில் அடிப்படை வசதிகள் இல்லாததால், அங்கிருந்து மற்ற பகுதி களுக்கு இடம் பெயர்ந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, சாலை உள்ளிட்ட வசதிகளை அப்பகுதியில் வசிப்போருக்கு செய்து தர நடவடிக்கை எடுத்துள்ளோம்.
2 ஆயிரம் கி.மீ. தூரம் அமைக்கப்படவுள்ள இந்த சாலையால், அப்பகுதியில் ராணுவ ரீதியான பாதுகாப்பை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். அதோடு, அங்கு வளர்ச்சிப் பணி களும் துரிதமாக நடைபெறும். இத்திட்டத் துக்கு ரூ. 40 ஆயிரம் கோடி செலவாகலாம் என மதிப்பிட்டுள்ளோம்” என்றார்.