

தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தெற்கு டெல்லியின் ஆண்ட்ரூஸ்கன்ச் பகுதியில் நான்கு ஆண்களால் நேற்று (புதன் கிழமை) பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும் ஒருவாறாக சமாளித்துக் கொண்ட அந்தப் பெண், அந்த ஆண்களைப் பின் தொடர்ந்து, காவல்துறை அவர்களைக் கைது செய்ததை உறுதி செய்துள்ளார். அவர்களுக்கு எதிராக காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வரும்போது நான்கு ஆண்களும் அவரின் காரைப் பின் தொடர்ந்துள்ளனர். ஓட்டுநர் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசியதோடு, ஆபாசமான சைகைகளையும் காட்டியுள்ளார்.
இதுகுறித்துப் பின்னர் ட்விட்டரில் கருத்து தெரிவித்த நிருபர், ''தேசத்தில் தலைநகரில், முக்கியமான இடத்தில் தைரியமான இந்த இதயங்களைக் கொஞ்சம் சந்தியுங்கள். அச்சப்படாமல் கீழ்த்தரமான கருத்துக்களைப் பகிர்ந்த ஹீரோக்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது பெண்ணின் மாண்புக்கு களங்கம் விளைவித்தல், பெண்ணை பின் தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.