

அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகளில் 6 முக்கிய விவகாரங்கள் குறித்து இரண்டு மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பான வழக்கு ஜி.எஸ்.சிங்வி, வி.கோபால் கெளடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியது:
நீரா ராடியா டேப் விவகாரத்தின் முதல்கட்ட விசாரணையிலேயே தனியார் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், செல்வாக்குமிக்க நபர்கள் பெருமளவில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புக் குழு, ராடியாவின் தொலை பேசி உரையாடல்கள் அடங்கிய பல்வேறு ஒலிநாடாக்களை ஆராய்ந்துள்ளது.
அதன் அடிப்படையில் குறிப்பிட்ட 6 விவகாரங்கள் குறித்து இரண்டு மாதங்களில் சிபிஐ விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எந்தெந்த விவகாரங்கள் என்பதை நீதிபதிகள் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. மேலும் நீரா ராடியாவின் உரையாடல்கள் முழுவதையும் ஆராயுமாறு சிறப்புக் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கு வசதியாக வருமான வரித்துறையைச் சேர்ந்த 10 சப்-இன்ஸ்பெக்டர்களை நியமித்து சிறப்புக் குழுவை நீதிபதிகள் விரிவுபடுத்தினர்.
இதனிடையே, நீரா ராடியா டேப் வழக்கில் ஒரு விவகாரம் நீதிமன்ற விவகாரம் தொடர்புடையது என்பதால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பார்வைக்காக அனுப்பப்பட்டது. இதேபோல் மற்றொரு விவகாரம் நிலக்கரித் துறை ஊழல் தடுப்புப் பிரிவு தலைவரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 16-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
நீரா ராடியா வழக்குப் பின்னணி...
டெல்லியில் அரசியல் தரகராகச் செயல்பட்ட நீரா ராடியா 9 ஆண்டுகளுக்குள் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களை குவித்தார். இதை மோப்பம் பிடித்த வருமான வரித்துறை அவரது தொலைபேசி உரையாடல்களை ரகசியமாகப் பதிவு செய்தது. 2008 முதல் 2009 வரை அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருடன் நீரா ராடியா நடத்திய தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டதில் 2ஜி அலைக்கற்றை ஊழல் உள்பட பல்வேறு ஊழல் விவகாரங்களின் பின்னணி தெரியவந்தது. இந்த உரையாடல் விவரங்கள் ஊடகங்க ளில் கசிந்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.