பெங்களூரில் மீண்டும் இனவெறித் தாக்குதல்: எஃப்.ஐ.ஆர். பதிய 24 மணி நேரம் தவித்த பரிதாபம்

பெங்களூரில் மீண்டும் இனவெறித் தாக்குதல்: எஃப்.ஐ.ஆர். பதிய 24 மணி நேரம் தவித்த பரிதாபம்
Updated on
1 min read

மணிப்பூர் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இனவெறி தாக்குதலின் தாக்கம் மறைவதற்குள் பெங்களூரில் மற்றொரு இனவெறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வாரம் நாகாலாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினரையும் அவர்களது நண்பரையும், நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியுள்ளது. தாக்குதல் நடந்த சிலமணி நேரங்களில், அத்தம்பதியினர் சுலதேவனஹள்ளி காவல் நிலையத்திற்கு விரைந்துள்ளனர்.

ஆனால், சம்பவம் நடைபெற்ற இடம் தங்கள் காவல்நிலைய கட்டுப்பாட்டு எல்லைக்குள் வரவில்லை எனக் கூறி வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டனர். பின்னர், அவர்கள் தொட்டபல்லப்பூர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கும், அதே காரணத்தைக் கூறி அதிகாரிகள் வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளர். கடைசியாக 24 மணி நேரத்துக்குப் பின்னர் தொத்தபெலவங்களா காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுவும், பெங்களூரில் வாழும் வடகிழக்கு மாநில மக்களின் விவகாரங்களுக்கான அதிகாரி வி.எஸ்.டிசோஸா தலையிட்ட பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில், "நாங்கள் வெளியில் சென்று திரும்புகையில் எங்களது கார் டயர் பழுதடைந்துவிட்டது. டயரை மாற்றுகையில் 4 நபர்கள் காரில் வந்து கன்னடத்தில் ஏதோ கூறினர். பாஷை தெரியாததால் நாங்கள் பதிலளிக்கவில்லை. அதற்குள் எங்களை தாக்கிவிட்டு தப்பினர்.” என்று தெரிவித்தார்.

இது குறித்து போலீஸ் கமிஷ்னர் எம்.என்.ரெட்டி 'தி இந்து' செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "தம்பதியினருக்கு நடந்த இத்தாக்குதல் சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. காவல் நிலைய எல்லைக் கட்டுப்பாட்டு வரம்புகளைக் கூறி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருக்க எந்த காவல் அதிகாரிக்கும் உரிமை இல்லை. வழக்கை பதிவு செய்ய மறுத்த காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

பெங்களூரில் தொடந்து நடந்து வரும் இனவெறித் தாக்குதலால் பெங்களூர் வாழ் வடகிழக்கு மாநிலத்தவர் பதற்றமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்கள் முன்பு, மணிப்பூர் மாணவனுக்கு நடந்த தாக்குதலுக்குப் பிறகு உள்துறை அமைச்சர் கே.ஜெ.ஜார்ஜ், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கும், உள்ளூர் மக்களுக்குமிடையே சுமுக உறவை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு பிரப்பித்துள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் ஒரு இனவெறித் தாக்குதல் அரங்கேறியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in