Published : 21 Feb 2014 03:06 PM
Last Updated : 21 Feb 2014 03:06 PM

எனது பெற்றோரை மன்னியுங்கள்: ராகுலுக்கு நளினி-முருகன் மகள் வேண்டுகோள்

"என் அம்மாவின் தண்டனை குறைக்கப்பட்டதற்காக சோனியா காந்திக்கும், என் அம்மாவை மன்னித்ததற்காக பிரியங்கா காந்திக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். தனது தந்தை இழந்து வாடும் பிரியங்காவுக்காக மிகவும் வருந்துகிறேன்."

- 'தி இந்து' (ஆங்கிலம்) செய்தியாளர் பார்வதி மேனன் உடன் ஜி-மெயில் சாட் மூலம் பேசிய ஆரித்ரா (22), ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி - முருகன் தம்பதியரின் மகள்.

இந்த இணைய உரையாடலில் அவர் மேலும் கூறும்போது, "நமக்குப் பிரியமானவர்களைப் பிரிந்து வாடுவது எப்படிப்பட்ட உணர்வு என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், தாய் - தந்தை இல்லாமல் நான் அத்தகைய வலியைத்தான் அனுபவித்து வருகிறேன்.

என்னுடைய பெற்றோர் அப்பாவிகள் என நம்புகிறேன். 23 வருடங்கள் கஷ்டப்பட்டது அவர்கள் மட்டுமல்ல, எந்தத் தவறும் செய்யாத நானும்தான். எனக்காகவாவது எனது பெற்றோரை மன்னித்து, விடுவிக்கும்படி ராகுல் காந்தியை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

என் பெற்றோரின் விடுதலைச் செய்தியைக் கேட்டு, அவர்களோடு இணையப்போவத்தை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், மறுநாளே நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தைக் கேட்டு மனம் உடைந்துப் போனேன்" என்றார்.

தனது பெற்றோருக்கான தகவலாக, "தைரியமாக இருங்கள். உங்களுக்காக நான் எப்போதும் காத்திருப்பேன்" என்று ஆறுதல் கூறினார் ஆரித்ரா.

"எனக்கு அரசியல் புரியாது. எனது பெற்றொரின் மரண தண்டனையைக் குறைக்க ஆதரித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதே எனது முதல் விருப்பம். அவர்கள் இல்லாமல் 22 வருடங்களாக துன்பத்தில் இருக்கிறேன். எனவே, அவர்கள் விடுதலைக்கு ஆதரவு தாருங்கள்" என்று ஆரித்ரா கேட்டுக்கொண்டார்.

உங்களின் மூன்று விருப்பங்கள் என்னென்ன என்று கேட்டதற்கு, "1. எனது பெற்றோர், என்னோடு இருக்க வேண்டும்; 2. ராஜீவ் காந்தி கொல்லப்படாமல், அவர் தனது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும்; 3. படுகொலை சம்பவங்களில் யாரும் இறக்காமல், அத்தகைய சம்பவங்களே நடந்திருக்காமல், அனைவரும் அமைதியாக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்" என்று தன் விருப்பங்களை அடுக்கினார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ஆரித்ரா, ஸ்காட்லாந்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பட்டப்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அப்போது முதலே அவர் தனது பெற்றோரைப் பார்த்ததில்லை. ஒவ்வொரு மாதமும் கடிதப் பரிமாற்றம் மட்டும் நடக்கிறது.

தற்போது தான் இருக்கும் இடத்தைப் பற்றியோ, பட்டப்படிப்பு மேற்கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தைப் பற்றியோ கூற விரும்பாத ஆரித்ரா, மருத்துவ இயற்பியல் துறையில் பி.எச்டி பட்டம் பெற விரும்புவதாக குறிப்பிட்டார்.

மருத்துவப் படிப்பில் தனக்கு விருப்பம் இல்லாததற்குக் காரணமாக அவர் கூறியது: "ரத்தத்தைப் பார்க்கும் வல்லமை என்னிடம் இல்லை."

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x