

குஜராத் மாநிலம் குல்பர்க் சொசைட்டி பகுதியில் 69 பேர் படு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப் பட்ட 24 பேருக்கான தண்டனை விவரத்தை ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொலைக்குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ள 11 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சபர்மதி ரயிலில் சென்ற கரசேவகர்கள் 58 பேர் கோத்ரா ரயில் நிலையம் அருகே எரித்துக் கொல்லப்பட்டனர். இதையடுத்து குஜராத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. அப்போது, குல்பர்க் சொசைட்டி பகுதியின் குடியிருப் புக்குள் நுழைந்த 400-க்கும் மேற் பட்டோர் அங்கிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உட்பட 69 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுதொடர்பான வழக்கு ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடக்கிறது. மொத்தம் 66 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதில் விசாரணை காலத்தில் 6 பேர் இறந்துவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் 24 பேர் குற்றவாளி கள் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி. தேசாய் கடந்த 2-ம் தேதி தீர்ப்பளித்தார்.