

உலகளவில் உள்ள இளைஞர்களின் மாரத்தான் ஓட்டத்தை மையமாக கொண்ட படம் புதியா சிங் பார்ன் டூ ரன். இப்படத்தை சவுமேந்திரா பதி இயக்கியுள்ளார். இவர் இப்படத்தில் நடிப்பதற்காக சத்தீஸ்கர், புனே மற்றும் மும்பை பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 1200 சிறுவர்களை தேர்வுக்கு அழைத்துள்ளார். அதில் புதியா அவோக் சிங்கை தேர்வு செய்துள்ளார்.
சேரியிலிருந்து ஒரு சிறுவனை காப்பற்றும் ஜூடோ மாஸ்டர், அந்த சிறுவனின் திறமைகளை கண்டறிந்து, சாதனையாளனாக மாற்றுகிறார். ஒரு நாள் அந்த மாஸ்டர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்படுகிறார். அதன் பிறகு அந்த சிறுவன் என்ன செய்தான் என்பதே படத்தின் கதை. இந்த படம் 5-ம் தேதி வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் ஒடிஷாவை சேர்ந்த 16 வயது சிறுவன் புதியா சிங்கின் வாழ்க்கையை மையமாக கொண்டே எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு புதியா சிங், பூரியிலிருந்து புவனேஸ்வர் வரையிலான 65 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி நேரம் 2 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்ததுடன் நாட்டையே அதிசயத்தில் ஆழ்த்தினான்.
அவனுக்குள் இருந்த திறமையை வெளிக் கொண்டு வந்தவர்தான் ஜூடோ மாஸ்டர் பிராஞ்சி தாஸ். புதியாவால் அதிக தூரம் ஓடி சாதனை படைக்க முடியும் என்றும் அறிவித்தார் பிராஞ்சி. ஆனால் அதன் பின்னர்தான் சர்ச்சைகள் வெடித்தன. பல தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள், சிறார் நல அமைப்புகள், புதியா சிங்கை வைத்து பணம் பார்க்க முயற்சிக்கிறார் பிராஞ்சி சிங், சிறுவனின் உடல் நலத்தைக் கெடுக்கும் செயல் இது என்று எதிர்ப்பு குரல் எழுப்பினர்.
இதையடுத்து பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார் பிராஞ்சி தாஸ். கடந்த 2008-ம் ஆண்டு மர்ம நபர் களால் பிராஞ்சி தாஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். 6 வயதிலேயே மாரத்தானில் சாதனை நிகழ்த்திய புதியா சிங்கின் கனவு இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் ஓடவேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. சிறுவனாக இருந்த அவனை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினர். ஆனால் அதன் பிறகு அவனது திறமையை யாருமே கண்டுகொள்ளவில்லை. எல்லோருமே மறந்து விட்டனர். தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
புவனேஷ்வரில் இன்னும் சேரிபகுதியில் தனது தாய் சுகந்தி மற்றும் 3 சகோதரிகளுடன் வாழ்ந்து வருகிறான் புதியா சிங். அரசு பள்ளியில் இலவசமாக பயின்று வருகிறான். மாணவர் விடுதியில் தான் தங்கியுள்ளான். விடுமுறையில் மட்டும் தாயை காண வீட்டுக்கு வந்து செல்கிறான்.
புதியா சிங் கூறும்போது, "சிறு வயதில் எனது வெற்றிக்கு காரணமாக இருந்தது எனது பயிற்சியாளர் பிராஞ்சி தாஸ்தான். அவர் எனக்கு சிறப்பான முறையில் பயிற்சி வழங்கினார்.
காலையில் 4 மணிக்கு எல்லாம் எழுந்துவிடுவேன். இரண்டு மணி நேரம் ஓடுவேன். பின்னர் 6 மணி முதல் 10 மணி வரை பள்ளி செல்வேன். அதன் பின்னர் மாலையில் 3 மணிக்கு மீண்டும் பயிற்சி மேற்கொள்வேன்.
எனது தாய் என்னை விற்றுவிட்டதாகவும் நான் தான் உன்னை உருவாக்கி பிரபலமடைய செய்தேன் என்றும் பிராஞ்சி கூறுவார். பயிற்சியின் போது அவர் ஒருபோதும் என்னை தண்டித்ததில்லை. ஆனால் பயிற்சி விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார். அவர் என்னை வைத்து பணம் சம்பாதிப்பதாகவும், தாக்கி கொடுமைப்படுத்துவதாக பலர் புகார் கூறினர். ஆனால் பிராஞ்சி சார் என்னை ஒருநாளும் அடித்ததில்லை. பின்னர் ஏன் இதுபோன்ற புகார்களை அவர்கள் கூறினார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. பிராஞ்சி சிறந்த பயிற்சியாளர்.
எங்கள் இருவருக்குள்ளும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது.
அவர் இறந்த போதுகூட என்னை விடுதியில் இருந்து அனுப்ப மறுத்துவிட்டனர். விளை யாட்டு விடுதியில் 12 மாணவர் களுக்கு ஒரு பயிற்சியாளர் உள் ளார். உணவு கட்டுப்பாடும் இங்கு கிடையாது. எண்ணெய் மிகுந்த உணவுகளைதான் வழங்கு கிறார்கள். வெளியில் இருந்தும் உணவை வாங்க அனுமதி கிடையாது. விடுதியில் சுதந்திரமும் கிடையாது. விடுதியில் இருந்து வெளியே செல்ல வேண்டுமானால் அனுமதி சீட்டு பெற வேண்டும். அதை பெற நீண்ட வழிமுறைகள் உள்ளது.
இந்த பிரச்சினைகள் குறித்து எனது தாய் புகார் கூறினாலும் யாரும் அதை காதில் வாங்கு வதில்லை. மொத்தத்தில் யாருக் குமே நான் தெரியாதவனாகி விட்டேன். அரசிடம் இருந்து எனக்கென்று தனியாக எந்த சிறப்பு சலுகைகளும் இல்லை. சக மாணவர்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதையே நானும் பெறுகிறேன். பயிற்சி பெறுவதிலும் இதே நடைமுறைதான்.
இவ்வாறு புதியா சிங் கூறினார்.
புதியா சிங்கின் தாய் சுகந்தி ஒரு தனியார் நிறுவனத்தில் பணிப்பெண் வேலை செய்துவருகிறார். அவருக்கு மாத சம்பளம் ரூ.8 ஆயிரம். இதில் வீட்டு வாடகை ரூ.2 ஆயிரம் சென்றுவிடுமாம். மீதி பணத்தில் குடும்பத்தை நடத்தவே சிரமப்பட்டு வரும் நிலையில் புதியாவின் பயிற்சி செலவுகளுக்காக அவரால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளார். மேலும் அவனது கல்லூரி படிப்பு வரை அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதியா அறிவியல் கல்லூரியில் பயில விரும்புகிறான். மேலும் டெல்லிக்கு குடிபெயர்ந்து தனது மாரத்தான் திறனை மேலும் வளர்த்துக்கொள்வதில் ஆர்வமாக உள்ளான்.
தனது கனவு குறித்து புதியா கூறும்போது, "நான் விளையாட்டு வீரரான இருக்க விரும்புகிறேன். மேலும் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு ஓடவேண்டும். தற்போது நான் பயிற்சிகளில் ஈடுபடவில்லை. காலில் வலி உள்ளது. இதனால் ஒரு மாத காலம் ஓய்வில் உள்ளேன். மற்றபடி ஒழுங்காக பயிற்சி செய்வேன்
பார்ன் டூ ரன் படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் படத்தின் டிரெய்லர் நன்றாக உள்ளது. பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் வரும் பாஜ்பாயி எனது பயிற்சியாளர் போலவே உள்ளார்" என்றார்.
தற்போது தனது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப் பட்டுள்ள படத்தின் மூலமாவது ஏதாவது நல்ல வழிபிறக்காதா என காத்திருக்கிறான் 'மாரத்தான் வீரன்'.
புதியா சிங்