Published : 22 Oct 2014 09:12 AM
Last Updated : 22 Oct 2014 09:12 AM

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு: எடியூரப்பா மீது வழக்கு தொடரலாம் - கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தர‌வு

பாஜகவின் தேசிய துணைத் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா வரு மானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக எழுந்துள்ள புகார்கள் குறித்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி வகித்தபோது அவருக்கு நெருக்க மானவர்கள் ஷிமோகா மாவட்டத் தில் உள்ள ஷிகாரிபுராவில் 69 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளன‌ர். அடுத்த 6 மாதங்களில் இந்த நிலம் எடியூரப் பாவின் பெயருக்கும் அவருடைய மகனும் ஷிகாரிப்புரா சட்டமன்ற உறுப்பினருமான ராகவேந்திரா பெயரிலும் மாற்றப்பட்டுள்ளது.

உரிமையாளர்களை மிரட்டி மிக குறைந்த விலையில் நிலம் வாங் கப்பட்டிருப்பதாக புகார் எழுந் துள்ளது. நிலம் வாங்கியது தொடர் பாக எடியூரப்பா அந்த ஆண்டு தாக்கல் செய்த வருமான வரித்துறை கணக்கில் தாக்கல் செய்யவில்லை.அவருடைய வருமானமும் நிலத்தின் மதிப்பும் பொருந்தாத வகையில் இருக்கிறது. இதனால் எடியூரப்பா முறைகேடாக சொத்து சேர்த்திருப்பது தெரிய வருகிறது. அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பி.வினோத் என்பவர் ஷிமோகா லோக் அயுக்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த ஷிமோகா லோக் அயுக்தா நீதி மன்றம்,'எடியூரப்பா மீது வழக்கு தொடர்வதற்கு ஆளுநரின் அனுமதி பெற வேண்டும்'எனக் கூறி அவருடைய மனுவை கடந்த 2009-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது.

மறு சீராய்வு மனு

இந்நிலையில் வழக்கறிஞர் பி.வினோத் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் எடியூரப்பா மீதான புகாரை மறு சீராய்வு செய்யுமாறு மனு தாக்கல் செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இம்மனு நீதிபதி ஆனந்த் பைர ரெட்டி முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான வழக்கறி ஞர் பி.வினோத்,''எடியூரப்பா தனது வருமானத்தை மறைத்தும் பினாமி பெயரிலும் நிலம் வாங்கியுள்ளார். சில மாதங்களுக்கு பிறகு அந்த நிலத்தை தனது பெயருக்கும் மகன் பெயருக்கும் மாற்றியுள்ளார். இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. அதன் அடிப்படையில் எடியூரப்பா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

தற்போது எடியூரப்பா முதல்வ ராக இல்லாததால் அவர் மீது வழக்கு தொடர ஆளுநரின் அனுமதி தேவையில்லை. எனவே இது குறித்து நியாயமாக விசாரணை நடத்த ஷிமோகா லோக் அயுக்தா நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண் டும்''என கோரிக்கை விடுத்தார்.

இதை தொடர்ந்து நீதிபதி ஆனந்த பைரரெட்டி கூறியபோது,'' மனுதாரரின் கோரிக்கையை ஏற்று ஷிமோகா லோக் அயுக்தா நீதி மன்றம் எடியூரப்பா மீது குற்றவியல் நடைமுறை விதிகளின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானத்தை கருத்தில் கொண்டு சொத்துக்குவிப்பு வழக்கு தொடர வேண்டும்.

எடியூரப்பா உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களும் மனுதாரரும் வழக்கின் விசாரணைக்கு முழு மையான‌ ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். இவ்வழக்கின் விசா ரணை தொடர்ச்சியாக நடைபெற்று ஓராண்டில் தீர்ப்பளிக்க வேண்டும்'' என உத்தரவு பிறப்பித்தார்.

எடியூரப்பா பதில்

பாஜக தேசியத் துணைத் தலைவர் எடியூரப்பா இது குறித்து பேசியபோது,''என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதார மற்றது, என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் திறந்த புத்தகம் போன்றவை, வழக்கை சட்டப்படி எதிர்கொண்டு கூடிய விரைவில் விடுதலை ஆவேன்'' என்றார்

கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா 2010-ம் ஆண்டு சட்ட விரோத சுரங்க ஊழல் வழக்கில் சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்து சிறை தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x