Published : 11 Nov 2013 07:52 AM
Last Updated : 11 Nov 2013 07:52 AM

சத்தீஸ்கர் முதல்கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு மந்தம்

சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலில் முதல்கட்டமாக 18 தொகுதிகளில் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது. நக்ஸல்கள் அச்சுறுத்தல் காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

90 இடங்கள் கொண்ட சத்தீஸ்கர் சட்டமன்றத்துக்கு நவம்பர் 11, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் பிராந்தியத்தின் 12 தொகுதிகள், ராஜ்நந்த்கான் பிராந்தி யத்தின் 6 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 18 தொகுதிகளில் 143 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முதல்வர் ரமண் சிங் ராஜ்நந்த்கான் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் உதய்யின் மனைவி அல்கா போட்டியிடுகிறார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பஸ்தார் பகுதியில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் உதய் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் 27 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

பாதுகாப்பையும் மீறி தாக்குதல்:

மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் காரணமாக, சத்தீஸ்கர் முதல்கட்ட தேர்தல் பணியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்பு வளையத்தையும் மீறி காண்கர் மாவட்டத்தில் சிறிய ரக வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் காவலர் ஒருவர் படுகாயமடைந்தார்.

வாக்குப்பதிவு மந்தம்:

மொத்தம் 18 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில், 13 தொகுதிகளில், வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கும் பதற்றம் நிறைந்த 5 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வனப்பகுதியை ஒட்டி குறிப்பாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருக்கிறது.

11 மணி நிலவரப்படி 28% வாக்குகள் பதிவாகியிருந்தன. துர்காபூரில், நக்சலைட்டுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்தியதால் அங்கு வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.

'நோட்டா' அறிமுகம்:

முதல் முறையாக, சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை வழங்கும் 'நோட்டா' அமல் படுத்தப்பட்டது.

வேட்பாளர்கள் மோதல்:

மாவோயிஸ்டுகள் தாக்குதல் மட்டுமின்றி அரசியல் கட்சிகளுக்கு இடையேயும் மோதல் நடந்தது. ஜக்தல்பூர் பகுதியில் ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன் காங்கிரஸ் கட்சி வேட்பாள காங்கிரஸ் வேட்பாளர் ஷம்மு காஸ்யாப்காங்கிரஸ் வேட்பாளர் ஷம்மு காஸ்யாப்புக்கும், பா.ஜ., வேட்பாளர் சந்தோஷ் பாஃப்னாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி இரு தரப்பினருக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஷம்மு காஸ்யாப் உள்ளிட்ட 4 பேர் காயம் அடைந்தனர். கிராமவாசிகளுக்கு வழங்க மது பாட்டில்களை, பா.ஜ.க.வினர் வாகனங்களில் எடுத்துச் சென்றனர் என்பது காங்கிரஸ் தரப்பு புகார் ஆகும்.

தயார் நிலையில் ஹெலிகாப்டர்...

நக்ஸல் பகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுவதால் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 85,000-க்கும் மேற்பட்ட துணை ராணுவ படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மாநில போலீஸாரையும் சேர்த்து பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

18 தொகுதிகளில் மொத்தம் 4142 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1517 பதற்றம் நிறைந்தவையாகவும் 1311 அதிக பதற்றம் நிறைந்தவையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆள்மாறாட்டத்தை தடுக்க 2700-க்கும் அதிகமான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முன்னதாக நக்ஸல்கள் அச்சுறுத்தல் காரணமாக 167 வாக்குச் சாவடிகளின் இடங்கள் மாற்றப்பட்டன. சாலை வசதி இல்லாத 192 வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. அசாதாரண சூழ்நிலைகளைச் சமாளிக்க ராய்ப்பூரில் மருத்துவ வசதிகளுடன்கூடிய ஹெலிகாப்டர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி சோதனை...

வாக்குப் பதிவு நடைபெறும் அனைத் துப் பள்ளிகளிலும் கண்ணிவெடிகளை கண்டறியும் சோதனையை நடத்து மாறு பாதுகாப்புப் படையினருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையே அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அங்குலம் அங்குலமாக கண்ணிவெடி கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x