Last Updated : 14 Aug, 2016 12:00 PM

 

Published : 14 Aug 2016 12:00 PM
Last Updated : 14 Aug 2016 12:00 PM

ஒலிம்பிக்கில் தோல்வி என்று புலம்பக் கூடாது

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி என்றாலே, ஒலிம்பிக் மட்டுமல்ல - கோடை ஒலிம்பிக், ஆசியப் போட்டி, காமன்வெல்த் போட்டி போன்றவற்றுக்கும் சேர்த்துத்தான் - நாம் இருவிதமான மனநிலைகளில் அவற்றைப் பார்க்கிறோம். முதலாவது, சாதாரண விளையாட்டு ரசிகனின் பார்வை. இந்திய விளையாட்டு வீரர்கள் ஏராளமான விளையாட்டுகளில் தங்களுடைய திறமைகளைக் காட்டி பதக்கம் பெற முயற்சி செய்கிறார்கள் கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் என்ன, பங்கு கொண்டோம் என்பதே பெருமைதானே என்பது; மற்றொன்று பிரபல எழுத்தாளர் ஷோபா தே போன்றவர்களுடையது. சர்வதேசப் போட்டிகளில் வெற்றிபெறும் அளவுக்குத் தரம் இல்லாதபோது சர்வதேச அரங்குகளில் போய் நின்று அவமானப்படுவானேன் என்பது அவர்களுடைய கேள்வி.

உலகின் மிகப் பெரிய நாடு, தான் பங்கேற்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அதிக பதக்கங்களைக் குவிக்க வேண்டும் என்ற ஆசை நியாயமானதுதான்.

பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நமக்குக் கிடைத்த வெற்றிகளைப் போல ரியோவில் நடக்கும் போட்டிகளில் வெற்றி கிட்டவில்லைதான். அதன் காரணங்களை பொறுமையாக அலசினால் நம்முடைய எதிர்பார்ப்பும் அவமான உணர்ச்சியும் தவறு என்று புரியும்.

கடந்த 96 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டி களில் நாம் பங்கேற்று வந்தாலும் இதுவரையில் மொத்தமே ஒரு தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலங்களைத்தான் பெற்றிருக்கிறோம். இவற்றிலுமே 11 தனிநபர் போட்டிகளில் வென்றவை. 2004 ஏதென்ஸ், 2008 பெய்ஜிங், 2012 லண்டன் ஒலிம்பிக்குகளில்தான் 11 பதக்கங்கள் பெறப்பட்டன. அதற்கும் முந்தைய 80 ஆண்டு பங்கேற்பில் 1952-ல் ஹெல்சிங்கியில் நடந்த போட்டியில் மல்யுத்தத்தில் பெற்றது ஒரேயொரு வெண்கலம்தான்.

இந்த நிலையில் பதக்கம் பெறும் முதல் 25 நாடுகளில் நாமும் ஒருவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு யதார்த்தத்துக்குப் பொருந்தாதது. உண்மையான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது என்பது அனுஷ்கா சல்மான்கான் ஜோடி சேர்ந்து நடித்த சுல்தானில் பதக்கங்களை அள்ளி வருவதைப்போல சுலபமானது அல்ல.

ஒரு மல்யுத்த வீரர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை அடைவதற்கே பத்தாண்டுகள் பயிற்சி செய்ய வேண்டும். நர்சிங் யாதவ் எவ்வளவோ போட்டிகள், பயிற்சிகளுக்குப் பிறகு வெண்கலம்தான் வாங்க முடிந்தது நல்ல உதாரணம். அதலடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் கடந்த ஒலிம்பிக்கில் 6-வதாக வந்தவர் நிகழ்த்திய சாதனையை முறியடிக்கும் அளவுக்குத் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்திய வீரர்கள் பலரின் தேசிய சாதனை ஒலிம்பிக் போட்டியில் 25-வது இடம் பெறுவோரின் சாதனைக்கும் குறைவு. ஹாக்கிப் போட்டியில் விளையாடக்கூட நாம் முதலில் ஆசியக் கண்டத்தில் சேம்பியனாகியிருந்தால்தான் முடியும் என்பதிலிருந்தே சர்வதேச ஒலிம்பிக் போட்டியின் தரம் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். இதனால்தான் பெய்ஜிங்கில் ஆடத்தகுதி பெறாமல் இப்போது ரியோவுக்குப் போயிருக்கிறோம்.

பொதுவாகப் பார்த்தால் இந்தியர்களின் விளையாட்டுத் திறன் அதிகமாகிக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் ஹாக்கி, மல்யுத்தம் என்று ஒரு சில போட்டிகளுக்குத்தான் செல்வோம். இப்போது 118 பேர் செல்ல முடிகிறது என்றால் பல்வேறு போட்டி களுக்கு நல்ல பயிற்சி பெற்று வருகிறோம் என்பது புரிகிறது. ஹாக்கி, மல்யுத்தம், குத்துச் சண்டை, துப்பாக்கி சுடுதல், வில் வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்று வருகிறோம்.

இந்தியாவிலிருந்து பங்கேற்ற நீச்சல் வீரர்களில் 2 பேர் மட்டும் அழைப்பின் பேரில் சென்றனர், மற்றவர்கள் தகுதியினால் தேர்வு செய்யப்பட்டனர். முன்பெல்லாம் உள்நாட்டுப் பயிற்சியாளர்கள் ஒரு போட்டியில் வீரர் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரத்தையும், திறனுக்கான வரம்பையும் நிர்ணயிப்பார். சர்வதேசப் போட்டிக்குச் செல்லும்போதுதான் அவர் நியமித்த நேரமும் வரம்பும் எவ்வளவு அற்பமானவை என்று அம்பலமாகும். இப்போது சர்வதேச தரத்துக்கேற்ப இந்தியாவிலேயே பயிற்சி தந்து தகுதியைத் தீர்மானிக்கின்றனர். எந்த நாடும் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்பதற்குத் தகுதியான முதல் 50 இடங்களில் ஒன்றைப் பெற வேண்டும். பிறகு அதையே மேலும் தீவிரப் பயிற்சியின் மூலம் முதல் 25 இடங்களாகக் குறைக்க வேண்டும். அதன் பிறகு 10-ல் ஓரிடத்தைப் பிடிக்க வேண்டும். பிறகுதான் பதக்கக் கனவையே காண வேண்டும். சில தனி விளையாட்டு வீரர்கள் அல்லது வீராங்கனைகள் தங்களுடைய தனித்திறன் காரணமாக சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றனர் மேரி கோம், சாய்னா நெவால் போல.

இப்போதும் கூட பதக்கம் நமக்கு நிச்சயமில்லை. நம்மிடையே மைக்கேல் பெல்ப்ஸ் கிடையாது. ஏன், பெரும்பாலான நாடுகளில் பெல்ப்ஸுக்கு இணையான வீரர் இல்லை. நீச்சல் போட்டிகளில் நாம் பின் தங்கித்தான் இருக்கிறோம். ஆசிய விளையாட்டுப் போட்டியில் நம்முடைய ஆடவர்களின் நீந்தும் நேரமே பிற நாடுகளின் பெண்கள் நீந்தும் நேரத்தைவிட அதிகமாக இருப்பதுண்டு. நம்முடைய உடல் திறன், நாம் அருந்தும் உணவு, பாரம்பரியமாகவே நமக்கிருக்கும் உடலமைப்பு இவையெல்லாம் சர்வதேச அளவில் போட்டியிட நமக்குத் தடையாகத் தொடருகின்றன.

இப்போது கிரிக்கெட் விளையாட்டில் தலைதூக்கி வரும் வங்கதேசம் இதுவரை ஒலிம்பிக் பதக்கம் எதையும் வாங்கியது கிடையாது. பாகிஸ்தான் அதலடிக்ஸ், ஜூடோ என்ற இரு பிரிவில்தான் பதக்கம் வாங்கியிருக்கிறது. தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்கூட ஒரு காலத்தில் மிகவும் பின்தங்கியிருந்த இந்தியா இப்போது பல நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறி வருகிறது.

நாட்டின் மக்கள் தொகைக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

ஹரியாணா இதுவரை பெற்ற ஒலிம்பிக் பதக்கங்களில் மூன்றில் இரண்டு மடங்கைக் குவித்துள்ளது. மணிப்பூர் ஹாக்கி, குத்துச் சண்டை, மகளிர் பளுதூக்கல், வில்வித்தை ஆகியவற்றில் முத்திரை பதித்து வருகிறது. கேரளமும் விளையாட்டில் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. ஹரியாணாவைப் போல 3 மடங்கு, கேரள மக்கள் தொகையைப் போல 2 மடங்கு, மணிப்பூரைப் போல 20 மடங்கு உள்ள குஜராத்திலிருந்து ஒருவர் கூட தகுதிச் சுற்றில் இடம்பெறும் அளவுக்கு உருவாகவில்லை.

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் ஏதும் கிடைக்காவிட்டால் குடிமுழுகிப் போய்விடாது. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 11 தங்கம் உள்பட 57 பதக்கங்களைக் குவித்திருக்கிறோம். அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4-வது இடத்துக்கு முயற்சி செய்ய வேண்டும். வட கொரியா, தாய்லாந்து, கஜகஸ்தான், ஈரானை மிஞ்ச வேண்டும். அதுதான் காரிய சாத்தியமான, நிறைவேற்றக்கூடிய இலக்காக இருக்க முடியும்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x