அரசியல்வாதிகள் முட்டாள்கள்: விஞ்ஞானி ராவ் காட்டம்

அரசியல்வாதிகள் முட்டாள்கள்: விஞ்ஞானி ராவ் காட்டம்
Updated on
1 min read

பாரத ரத்னா விருது பெறும் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ், அறிவியல் துறைக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யப்படாததைச் சுட்டிக்காட்டி, அரசியல்வாதிகளை முட்டாள்கள் என சாடினார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சிந்தாமணி நகேச ராமச்சந்திர ராவ் (சி.என்.ஆர். ராவ்), வேதியியல் துறையின் தலைசிறந்த விஞ்ஞானி. இதுவரை 1,400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

சர் சி.வி.ராமன், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு அடுத்தபடியாக பாரத ரத்னா விருது பெறும் 3-வது விஞ்ஞானி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தற்போது அவர், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் குழுத் தலைவராக உள்ளார். செவ்வாய்க் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய திட்டத்துக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டவர்.

பாரத ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி விஞ்ஞானி ராவ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசும்போது, அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்குவது, வசதிகளைச் செய்து தருவதன் முக்கியத்துவத்தை விவரித்தார்.

இந்தியாவில் உள்ள அறிவியல் ஆராய்ச்சிகள் தரம் குறித்து கேள்வி எழுப்பியபோது ஆவேசமடைந்த அவர், "அறிவியல் துறைக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியைவிட அதிகமாகவே நாங்கள் செயலாற்றுகிறோம். எங்களுக்கு இந்த முட்டாள்கள்; அரசியல்வாதிகள் ஏன் சிறிதளவே ஒதுக்கீடு செய்கிறார்கள்?" என்றார் காட்டமாக.

"நமது முதலீடு குறைவாகவே இருக்கிறது, அதுவும் தாமதமாகவே செலவிடப்படுகிறது. அந்த நிதியை வைத்துதான் செயல்பட்டு வருகிறோம்" என்றவர், இந்தியாவில் அறிவியல் ஆய்வுக்காக செலவிடப்படும் தொகை, ஒரு தொகையே அல்ல என்று குறிப்பிட்டார்.

அறிவியல் துறையில் சீனாவின் முன்னேற்றம் குறித்து கேட்டதற்கு, "நம்மைதான் நாம் குறைகூற வேண்டும்; நாம் கடினமாக உழைப்பதில்லை; நாம் சீனர்களைப் போன்றவர்கள் அல்லர். நாம் இலகுவாக இருக்கவே விரும்புகிறோம்" என்றார் விஞ்ஞானி ராவ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in