

அப்சல் குரு நினைவு நாளை யொட்டி பிரிவினைவாதிகளின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் ஷோபியான் நகரில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் 4-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து தலைநகரில் 6 காவல்நிலையப் பகுதிகள் மற்றும் ஷோபியான் நகரில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதற்றம் மிகுந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இதனிடையே பிரிவினை வாதிகளின் போராட்ட அழைப்பால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடி யிருந்தன. அரசுப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. தனியார் கார்கள், வாடகை கார்கள், ஆட்டோக்கள் இயங்கின. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்ற அச்சம் கருதி பாரமுல்லா பனிஹால் இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
டெல்லி, திஹார் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு, பிப்ரவரி 9-ம் தேதி, அப்சல் குரு தூக்கில் இடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.