Last Updated : 13 Jun, 2015 11:20 AM

 

Published : 13 Jun 2015 11:20 AM
Last Updated : 13 Jun 2015 11:20 AM

என்னை ஏன் எரித்தார்கள்?- மரண வாக்குமூலத்தில் பத்திரிகையாளர் உருக்கம்

உத்தரப் பிரதேசத்தை ஆளும் அகிலேஷ் யாதவ் அரசின் மீதான மோசமான குற்றச்சாட்டு இதுவாகவே இருக்க முடியும்.

ஆம், மரண வாக்குமூலம் அளித்த ஜகேந்தர் சிங் என்ற பத்திரிகையாளர் தன் மரணத்துக்கு பால் வளத்துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மாவை காரணம் என மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

மரணப் படுக்கையில் தீக்காய வேதனைக்கு மத்தியில் அவர் பேசும்போது, "அன்றைய தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ராய் மற்றும் 5 போலீஸ்காரர்கள் என் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். என்னை சரமாரியாக தாக்கினர். என்னை அவர்கள் கைது செய்திருக்கலாம். அல்லது என்னை இன்னும் பலமாக அடித்து தாக்கியிருக்கலாம். ஆனால், எதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர்" என உருக்கமான கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜகேந்திர சிங். இவர் பிரபல பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றி வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா குறித்து அவர் எதிர்மறையான செய்திகளை வெளியிட்டு வந்தார்.

சுரங்க முறைகேடு, நில அபகரிப்பு உட்பட பல்வேறு சட்டவிரோத செயல்களில் அமைச்சர் ஈடுபட்டு வருவதை ஜகேந்திர சிங் தனது செய்திகளின் மூலம் அம்பலப்படுத்தினார். இந்தச் செய்திகளை அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றம் செய்து வந்தார்.

அண்மையில் பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா சொந்த கட்சிக்கே துரோகம் செய்கிறார் பாஜகவுக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி இரவு ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக ஜகேந்திர சிங்கை அவரது வீட்டில் போலீஸார் கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது ஜகேந்திர சிங் மர்மமான முறையில் தீப் பிடித்து எரிந்தார். அமைச்சருக்கு ஆதரவான போலீஸ் அதிகாரி ஒருவர் அவரை தீ வைத்து கொளுத்தியதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜகேந்திர சிங் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

முன்னதாக அவர் அளித்த வாக்குமூலத்தில், அமைச்சரின் ஆட்கள் தன்னை தீ வைத்து கொளுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் வாக்குமூலம் அளித்த அந்த வீடியோவின் பிரதி தி இந்து (ஆங்கில) நாளிதழுக்கு கிடைத்துள்ளது. அதில், ஜகேந்திர சிங் தன் சாவுக்கு காரணமானவர் பால்வளத் துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா என தெளிவாக தெரிவித்திருக்கிறார்.

மரணப் படுக்கையில் அவர் கூறும்போது, "அன்றைய தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ராய் மற்றும் 5 போலீஸ்காரர்கள் என் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். என்னை சரமாரியாக தாக்கினர். என்னை அவர்கள் கைது செய்திருக்கலாம். அல்லது என்னை இன்னும் பலமாக அடித்து தாக்கியிருக்கலாம். ஆனால், எதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர்" என உருக்கமான கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார்.

மே 22-ம் தேதி அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உண்மையை எழுதுவதற்காக என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. என்னை அரசியல்வாதிகளும், போலீஸாரும், குண்டர்களும் துரத்திக் கொண்டிருக்கின்றனர். ஒருவேளை ராம் மூர்த்தி வர்மாவால் நான் கொலை செய்யப்படலாம்" எனப் பதிவு செய்திருந்தார்.

அவர் ஏற்கெனவே கூறியதுபோல், ஜூன் 1-ம் தேதி மர்மமான முறையில் தீக்கிரையாக்கப்பட்டார்.

வழக்கு பதிவு:

ஆரம்ப நிலையில், பத்திரிகையாளர் ஜகேந்திர சிங் தற்கொலை செய்துவிட்டதாக கூறிவந்த ஷாஜகான்பூர் போலீஸார் பொதுமக்கள், சமூகநல ஆர்வலர்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து இது தொடர்பாக அமைச்சர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x