மனைவி மீது சந்தேகம்: கொலை வெறித் தாக்குதல் நடத்திய கணவன் கைது

மனைவி மீது சந்தேகம்: கொலை வெறித் தாக்குதல் நடத்திய கணவன் கைது
Updated on
1 min read

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை அடித்து உதைத்து நிர்வாணமாக்கியதுடன், வீதியில் ஓட விட்டு கொலை செய்வதற்காக கத்தியுடன் விரட்டிய குடிகார கணவனை போலீஸார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரசிம்முலு (32). இவரது மனைவி கவிதா (27). கவிதாவின் நடத்தையில் சந்தேகமடைந்த நரசிம்முலு, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த நரசிம்முலு, மனைவி கவிதாவிடம் தகராறு செய்தார்.

போதையில் ஆத்திரமடைந்த நரசிம்முலு, மனைவியை அடித்து உதைத்தார். மனைவி வெளியே ஓடி விடாதவாறு, அவரது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கினார்.

பின்னர், தலைமுடியை பிடித்துக் கொண்டு கத்தியால் அவரை தாக்கினார். இதையடுத்து கணவனிடமிருந்து தப்பித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் கவிதா ஆடைகளின்றி வீட்டை விட்டு வெளியே ஓடினார்.

அவரை விரட்டிச் சென்ற நரசிம்முலு, கவிதாவின் தலைமுடியை பிடித்துத் ‘தர தர’ வென சாலையில் இழுத்துச் சென்றார். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நரசிம்முலுவிடமிருந்து கவிதாவை மீட்க முயற்சித்தனர்.

ஆனால், ‘யாராவது அருகில் வந்தால் கொலை செய்து விடுவேன்’ என குடிபோதையில் நரசிம்முலு மிரட்டியதால் அனைவரும் பின்வாங்கினர். அப்போது தனது உயிரையும், மானத்தையும் காப்பாற்றி கொள்ள, சாலை ஓரத்தில் இருந்த பெரிய சாக்கடையில் கவிதா குதித்தார். நரசிம்முலுவும் அந்த சாக்கடையில் குதித்து மனைவியை கொலை செய்ய முயற்சித் தார்.

இது குறித்து பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில், நிஜாமாபாத் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கவிதாவை மீட்டனர். நரசிம்முலுவை கைது செய்தனர்.

பின்னர், கவிதாவை நிஜாமாபாத் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in