

தேசிய போலீஸ் அகாடமியின் முதல் பெண் தலைவராக அருணா பகுகுணா நியமிக்கப்படவுள்ளார்.
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் முதல் பெண் இயக்குநராக, 1979 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான அருணா பகுகுணா(56) பொறுப்பேற்கவுள்ளார்.
துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) சிறப்பு தலைமை இயக்குநராக அருணா பகுகுணா தற்போது பணிபுரிந்து வருகிறார். இந்தப் பதவி வகிக்கும் முதல் பெண் அதிகாரியும் இவரே.
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக அவரை நியமிப்பதற்கான அரசாணை விரைவில் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திரப் பிரதேச போலீஸ் துறையில் பல்வேறு பொறுப்புகளை அருணா வகித்துள்ளார்.
தேசிய போலீஸ் அகாடமியின் (என்பிஏ) இயக்குநரான சுபாஷ் கோஸ்வாமி, இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த இடத்துக்கு, அருணா நியமிக்கப்படவுள்ளார். தேசிய போலீஸ் அகாடமியின் 28 ஆவது இயக்குநராக அருணா இருப்பார்.