கர்நாடக முதல்வர், அமைச்சர் வீடுகள் முற்றுகை

கர்நாடக முதல்வர், அமைச்சர் வீடுகள் முற்றுகை
Updated on
1 min read

உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா சார்பாக சரியாக வாதிடவில்லை எனக்கூறி முதல்வர் சித்தராமையா, நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் உள்ளிட்டோரின் வீடுகளை முற்றுகையிட்டு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்துக்கு காவிரியில் 10 நாட்களுக்கு 15,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உச்ச நீதி மன்றம் கர்நாடகாவுக்கு உத்தர விட்டது. இவ்வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் சரியாக வாதாடவில்லை.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலும் இந்த விவகாரத்தை உரிய முறையில் அணுகவில்லை எனக்கூறி மண்டியாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சித்தராமையாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

கர்நாடகாவுக்கு அநீதியை இழைத்த சித்தராமையாவும், எம்.பி. பாட்டீலும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக ஆதரவு விவசாய சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சலுவளி கட்சி ஆகிய கன்னட‌ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று பெங்களூருவில் உள்ள சித்தராமையா, எம்.பி.பாட்டீல் ஆகியோரின் வீடுகளை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சித்த ராமையா, எம்.பி. பாட்டீல், சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச் சந்திரா உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களின் வீடுகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேவகவுடா வேண்டுகோள்

இதனிடையே முன்னாள் பிரதமரும், மஜத தலைவருமான தேவகவுடா, “தமிழக விவசாயிகள் பாசனத்துக்காக காவிரி நீரைக் கேட்கின்றனர். ஆனால் கர்நாடகாவில் குடிப்பதற்கு கூட போதிய நீர் இல்லை. இந்த விவகாரத்தை விரிவாக உச்ச நீதிமன்றத்தில் விளக்கி இருக்க வேண்டும். இந்நிலையில் கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது இயல்பானது என்றாலும், சட்டத்தைக் கையில் எடுப்பதை ஏற்க முடியாது.

அமைதியான முறையில்தான் போராட வேண்டும். எத்தகைய வன்முறை சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை எரிக்கக் கூடது” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in