சட்டபூர்வ சூதாட்டம், அரசியல்வாதிகள் இல்லாத அமைப்புகள்: பிசிசிஐ சீரமைப்புக்கு லோதா குழு பரிந்துரைகள்

சட்டபூர்வ சூதாட்டம், அரசியல்வாதிகள் இல்லாத அமைப்புகள்: பிசிசிஐ சீரமைப்புக்கு லோதா குழு பரிந்துரைகள்
Updated on
3 min read

பிசிசிஐ மேற்கொள்ள வேண்டிய கடுமையான சீர்த்திருத்தங்களுக்கான பரிந்துரை அறிக்கையை முன்னாள் தலைமை நீதிபதி லோதா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

இதில் கிரிக்கெட் போட்டிகளின் மீது பந்தயம் கட்டுவதை சட்டபூர்வமாக்கலாம் என்றும், ஆனால் சூதாட்டத்தில் வீர்ர்கள் ஈடுபடுவது குற்றமாக கருதப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் அதைச் சார்ந்த மாநில கிரிக்கெட் அமைப்புகளிலும் அரசியல்வாதிகள் இடம்பெறக்கூடாது என்று லோதா கமிட்டி மிகவும் வலுவான ஒரு பரிந்துரையை மேற்கொண்டுள்ளது.

இந்தப் பரிந்துரைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அடங்கிய 159 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி லோதா கமிட்டி தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த லோதா கூறியதன் முக்கிய அம்சங்கள்:

பிசிசிஐ சீர்திருத்தம் குறித்து பிஷன் பேடி, கபில் தேவ், சச்சின், டிராவிட், கும்பிளே போன்ற முன்னாள் கேப்டன்களிடம் ஆலோசனை பெறப்பட்டது. பிசிசிஐ தலைவர், செயலாளர் தவிர மற்ற அனைவரிடமும் ஆலோசனை நடத்தினோம். பிசிசிஐயில் செய்யவேண்டிய மறுசீரமைப்பு குறித்து எங்கள் பரிந்துரையில் வெளிப்படுத்தியுள்ளோம். அதன்படியே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிசிசிஐ-யில் தற்போது 30 முழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் சர்வீசஸ், ரயில்வேஸ் போன்ற அணிகளுக்கான அமைப்புகள் எதுவும் இல்லை. சிலர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதில்லை. சில மாநிலங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக மகாராஷ்டிராவில் 3, குஜராத்திற்கு 3, என்று உள்ளது, இது கூடாது ஒரு மாநில கிரிக்கெட்டுக்கு ஒரு பிரதிநிதித்துவமே வழங்கப்பட வேண்டும்.

கிரிக்கெட் ஆட்டத்தில் ஊழலை ஒழிக்க, பந்தயம் கட்டுதலை சட்டபூர்வமாக்குவது நல்லது. வீரர்கள், அதிகாரிகள் சூதாட்டப் பந்தயத்தில் ஈடுபடுவது குற்றமாகக் கருதப்பட வேண்டும்.

பிசிசிஐ செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை தேவை என்பதாலு, பொதுச்செயல்களில் அது ஈடுபடுவதாலும், அதன் செயல்பாடுகளை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. எனவே பிசிசிஐ-யை தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர பரிசீலிக்கப்பட வேண்டும்.

அதே போல் பிசிசிஐ நிர்வாகிகளுக்கு 3 ஆண்டுகால பதவி மட்டுமே வழங்கப்பட வேண்டும். பிசிசிஐ தலைவர் பதவி வகிப்பவர்கள் 3 ஆண்டுகள் கொண்ட பதவிக்காலத்தில் 2 முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற நிர்வாகிகள் 3 ஆண்டுகால பதவியை 3 முறைக்கு மேல் வகிக்கக் கூடாது.

பிசிசிஐக்கு ஒரு தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்படவேண்டும். அவர் பிசிசிஐயின் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்கவேண்டும்.

வீரர்களுக்கான சங்கம் தொடங்கப்படவேண்டும்.

பிசிசிஐயின் தேர்தல்களுக்கு தேர்தல் அதிகாரி நியமிக்கப்படவேண்டும். தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்பு அவர் நியமிக்கப்படவேண்டும்.

பிசிசிஐயின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் போன்றவர்களுக்கென சில விதிமுறைகள் விதிக்கப்படவேண்டும். 70 வயதுக்கு மிகாத இந்தியராக இருக்கவேண்டும். அமைச்சராகவோ அரசு அதிகாரியாகவோ இருக்கக்கூடாது. 3 வருடங்களுக்கு மேல் யாரும் ஒரு பதவியில் இருக்கக்கூடாது.

தற்போதைய விதிமுறைகளின் படி பிசிசிஐ தலைவருக்கு 3 வாக்குகள் உள்ளன. பிசிசிஐ-யின் நிரந்தர உறுப்பினராகவும் அல்லது வாக்கெடுப்பில் சமநிலை ஏற்படும் போது இவரது கூடுதல் வாக்கு அனுமதிக்கப்படுகது சரியானதே, ஆனால் கூட்டத்தின் தலைவராக இருக்கும் கூடுதல் வாக்குரிமை நீக்கப்பட வேண்டும்.

9 உறுப்பினர்கள் கொண்ட பிசிசிஐ-க்கு உயர்மட்ட கவுன்சில் அமைக்கப்பட வேண்டும், இந்த 9 உறுப்பினரக்ளில் 5 பேர் வாக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட வேண்டும், 2 பேர் வீரர்கள் சங்க பிரதிநிதிகளாக செயல்பட வேண்டும். ஒரு பெண்ணும் இதில் இடம்பெற வேண்டும். தலைமைச் செயலதிகாரியே பிசிசிஐ-யின் அன்றாட செயல்பாடுகளை நிர்வகிக்க வேண்டும்.

வீரர்கள் சங்கம், முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை தலைமையில் அமைக்கப்படும் ஸ்டியரிங் கமிட்டியினால் உருவாக்கப்படும், இதில் முன்னாள் வீரர்கள் மொகீந்தர் அமர்நாத், அனில் கும்ளே மற்றும் வீராங்கனை டயானா எடுல்ஜி ஆகியோர் இடம்பெறுவர். முதல் தர கிரிக்கெட் ஆடிய அனைவரும் வீரர்கள் சங்கம் உள்ளடக்கும்.

அதாவது முதல்தர கிரிக்கெட்டில அடிய ஆடவர், மகளிர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் ஆகியோர் இந்த சங்கத்தில் இடம்பெற வேண்டும்.

ஐபிஎல் கிரிக்கெட் பரிந்துரைகள்:


ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை அதனை நிர்வகிக்கும் தலைமை அமைப்பு ஆட்சிமன்றக் குழு என்ற அமைப்பாகும். இதில் 9 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இதில் செயலர், பொருளாளர் மற்றும் 2 உறுப்பினர்கள் முழுநேர உறுப்பினர்களால் நியமிக்கப்படுவார்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ள 5 உறுப்பினர்களில் ஒருவர் வீரர்கள் சங்கப் பிரதிநிதியாக நியமிக்கப்பட வேண்டும். 2 பேர் அணி உரிமையாளர்களின் சார்பாக நியமிக்கப்படுவார்கள். ஒருவர் இந்திய தணிக்கைக் கட்டுப்பாட்டு அலுவலகத்திலிருந்து நியமிக்கப் படவேண்டும்.

ஐபிஎல் குறித்த அனைத்து முடிவுகளையும் ஆட்சிமன்றக் குழுவே எடுக்க வேண்டும். நிதி தொடர்பான முடிவுகளும் இதில் அடங்கும். ஆட்சி மன்றக் குழு பிசிசிஐ-யின் பொதுக்குழுவுக்கு கட்டுப்பட்டதே. எனவே வரம்புக்குட்பட்ட தன்னாட்சி ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுவுக்கு உண்டு.

மேலும், ஒருவர் பிசிசிஐ நிர்வாகக் குழுவிலும், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகியாகவும் இரட்டைப் பதவி வகிக்க முடியாது.

மாநில கூட்டமைப்புகளுக்கு அளிக்கப்படும் நிதிகள் முறையாகக் கண்காணிக்கப்படும்.

“மாநில கிரிக்கெட் சங்கத்தின் அமைப்பில் ஒருபடித்தான தன்மையை பரிந்துரை செய்துள்ளோம். குறிப்பாக ஆயுள் முழுதும் மாநில சங்கங்களுக்கு அலுவலகம் கிடையாது, 9 ஆண்டுகளுக்கு மட்டுமே அலுவலகம் அனுமதிக்கப்பட வேண்டும். மாநில சங்கங்களில் கிரிக்கெட் மற்றும் சமூக நடவடிக்கைகள் பிரித்தறியப்பட வேண்டும். இவர்களது கணக்குகளை பிசிசிஐ தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.இரட்டை ஆதாயம் தொடர்புடைய விவகாரங்களைக் கண்காணிக்க ஓர் அதிகாரி நியமிக்கப்படவேண்டும். அவர், உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருக்கவேண்டும்.மாநில அமைப்புகளிலும் அரசியல்வாதிகள் இருக்கக்கூடாது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே அதில் இடம்பெறவேண்டும். போட்டிகள், சரியான சுழற்சி முறையில் மைதானங்களுக்கு ஒதுக்கப்படவேண்டும்” என்றார் முன்னாள் நீதிபதி லோதா.

மேலும் நேர்மையை உறுதிப்படுத்தும் விதமாக அறவியல் அதிகாரி ஒருவர் நியமிக்கப் படவேண்டும். இவர் இரட்டை ஆதாய விவகாரங்களை தீர்த்து வைக்க வேண்டும், நடத்தை விதிமுறைகள், ஊழல், விதிமுறைகளை மீறும் மாநில கிரிக்கெட் வாரியங்கள் ஆகியவை பற்றி இவர் முடிவுகள் மேற்கொள்வார்.

இந்த அறவியல் அதிகாரி முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்க வேண்டும். அதே போல் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வைக் கண்காணிக்க தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு 2 வாரங்களுக்கு முன்பாக தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.

பிசிசிஐ-யின் அனைத்து முடிவுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு முறையான விதத்தில் வெளிப்படைத்தன்மை பரமாரிக்கப்படுவது அவசியம்.

மேலும், ஐபிஎல் சி.ஓ.ஓ. சுந்தர்ராமன் எந்த வித தவறும் இழைக்கவில்லை என்று அவருக்கு கிளீன் சிட் வழங்கியுள்ளது நீதிபதி லோதா கமிட்டி.

ஆகிய பரிந்துரைகளை உச்ச நீதிமன்றத்திடம் 3 பேர் கொண்ட முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான குழு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in