

ராணுவத்திடம் பணம் வாங்கிய ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர்கள் யார் என்பதை முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
ராணுவ தலைமைத் தளபதியாக வி.கே. சிங் இருந்தபோது, உளவுத் தகவல்களை சேகரிப்பதற்காக தொழில்நுட்பச் சேவைப் பிரிவு தொடங்கப்பட்டது. இப்பிரிவில் நிதி முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதோடு, இந்தப் பிரிவில் பணியாற்றுவோர் ஜம்மு காஷ்மீர் மாநில அரசை கலைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது. இக்குற்றச்சாட்டுகளை வி.கே. சிங் மறுத்தார். எனினும், இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.சிங், “ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக அமைச்சர்கள் சிலருக்கு ராணுவம் பணம் அளித்துள்ளது. ஸ்திரத்தன்மையை பேணுவது மட்டுமின்றி, வேறு சில செயல்களுக்காகவும் பணம் தரப்படுகிறது. பிரச்சினையாக இருக்கும் குறிப்பிட்ட சில பகுதிகளில் அமைதியை கொண்டு வருவதற்காக முக்கியஸ்தர்கள் சிலருக்கும் பணம் தரப்படுகிறது. இது நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நடந்து வரும் வழக்கம்தான்” என்றார்.
ஷிண்டே கேள்வி
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே டெல்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: “பணம் வாங்கிய அமைச்சர்கள் யார் என்ற தகவலை வி.கே.சிங் தெரிவிக்க வேண்டும். அது தொடர்பான தகவலை அவர் அளித்தால், விசாரணைக்கு உத்தரவிடப்படும்.
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று காஷ்மீர் மாநில அரசிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தோ இதுவரை கோரிக்கை ஏதும் வரவில்லை.
வி.கே.சிங் பேசியது குறித்த முழு விவரங்கள் கிடைத்த பின்பு, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், “இது தேசப் பாதுகாப்பு சம்பந்தமான விஷயம். இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக விவாதிக்க முடியாது.
ராணுவத்தில் பணியாற்றிய அதிகாரிகள் யாராக இருந்தாலும், அதுவும் வி.கே.சிங்கைப் போன்று உயர் பதவியில் இருந்தவர்கள் இதுபோன்று பேசக்கூடாது. கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
வி.கே.சிங் கூறிய தகவல் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பாக ராணுவமும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகமும் முடிவு செய்யும்” என்றார்.
சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், “ராணுவத்திடம் பணம் பெற்ற அமைச்சர்கள் யார்? எதற்காக அவர்களுக்குப் பணம் வழங்கப்பட்டது. அந்தப் பணத்தை அவர்கள் எவ்வாறு செலவிட்டனர் எனபதை அறிய சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார். தேசிய மாநாட்டுக் கட்சியை சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் கையெழுத்திட்டு ஊடகங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: வி.கே.சிங்கின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது. உண்மைக்கு மாறானது.
பணம் வாங்கியதாக அமைச்சர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், பதவி விலக தயாராக இருக்கிறோம். சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பெயரை வி.கே.சிங் உடனடியாக வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.