Last Updated : 11 Feb, 2015 03:18 PM

 

Published : 11 Feb 2015 03:18 PM
Last Updated : 11 Feb 2015 03:18 PM

மத நல்லிணக்கத்தை மாநில ஆளுநர்கள் உறுதிபடுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தல்

'அரசியல் சாசன கோட்பாடுகள், வழிவகைகளில் இருந்து விலகுதல் கூடாது. அவ்வாறு செய்வது தேசத்தின் ஜனநாயகத் தன்மையை நலிவடையச் செய்வதுடன் மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நலனுக்கு கேடு விளைவிக்கும்' என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 46-வது மாநில ஆளுநர்கள் துவக்க விழாவில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விழாவில் பேசிய அவர், நல்லாட்சி செலுத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை விளக்கும் ஒரே ஆவணம் அரசியல் சாசனமே. அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளதன்படி மாநிலங்களில் அமைதியும், மத நல்லிணக்கமும் நிலவுவதை ஆளுநர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு இந்தியரின் பார்வையிலும், இந்திய அரசியல் சாசனத்தை தனது உரிமையை நிலைநாட்டும், சமத்துவத்தை உறுதிப்படுத்தும், சுதந்திரத்தை பேணிக்காக்கும் அச்சாரமாகவே இருக்கிறது.

எனவே, அரசியல் சாசன கோட்பாடுகள், வழிவகைகளில் இருந்து விலகுதல் கூடாது. அவ்வாறு செய்வது தேசத்தின் ஜனநாயகத் தன்மையை நலிவடையச் செய்வதுடன் மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நலனுக்கு கேடு விளைவிக்கும். மாநிலங்களில், யூனியன் பிரதேசங்களில் அரசியல் சாசனத்தின் அடிநாதத்தின்படியே ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்வது ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களின் பொறுப்பு. அமைதியும், மத நல்லிணக்கமும் நிலைத்திட ஆவன செய்ய வேண்டும்" என்று பிரணாப் கூறினார்.

இன்றும், நாளையும் நடைபெறும் மாநில ஆளுநர்கள் கூட்டத்தின் துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x