Last Updated : 29 Jun, 2017 08:10 AM

 

Published : 29 Jun 2017 08:10 AM
Last Updated : 29 Jun 2017 08:10 AM

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் சாதி தலைவரின் படம்: கர்நாடக தமிழ் அமைப்பினர் அதிருப்தி

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைவர் படம் வைக்கப்பட்ட விவகாரம் கர்நாடக தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூரு தமிழ்ச்சங்கம் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு குறிப்பிட்ட சாதி சங்கத்தினர் தங்கள் தலைவரின் படத்தை தமிழ்ச் சங்கத்தில் வைத் துள்ளனர். இதற்கு பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ. தாமோதரன் உள்ளிட்ட பெரும்பான்மை நிர்வாகிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஓரிரு செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்தப் படம் அங்கே வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, கர்நாடகாவில் வாழும் தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், இந்திய குடியரசு கட்சி, கர்நாடக தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த செயலுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் சி.ராசன் கூறும்போது, “சுதந்திரத்துக்கு முன்பு இருந்தே கர்நாடகாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் சாதி, மத பேதமில்லாமல் வசித்து வருகின்றனர்.

தமிழ் மொழியையும், பண்பாட்டையும் பரப்பி வருகின்றனர். அண்மை காலமாக தமிழக சாதி சங்கங்களின் பாதிப்பால் கர்நாடகாவிலும் சாதி சங்கங்கள் புற்றீசல் போல உருவாகி வருகின்றன. இவர்கள் கர்நாடக தமிழர்களை சாதி ரீதியாக கூறு போடுகின்றனர்.

தமிழ்ச் சங்கத்தில் வைக்கப் பட்டுள்ள சாதி தலைவரின் படத்தை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிடில் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்தி, நாங்கள் அகற்றுவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x