Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM

ஒடிசாவில் சட்டவிரோதமாக ரூ.60 ஆயிரம் கோடி கனிமம் வெட்டியெடுப்பு- நீதிபதி எம்.பி.ஷா ஆணையம் அறிக்கை

ஒடிசாவில் சட்டவிரோதமாக ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான இரும்பு மற்றும் மேங்கனீஸ் தாது வெட்டியெடுத்ததாக டாடா ஸ்டீல், செயில், ஜெ.எஸ்.பி.எல்., ஆதித்ய பிர்லா குழுமம் ஆகிய நிறுவனங்கள் மீது நீதிபதி எம்.பி.ஷா ஆணையத்தின் அறிக்கையில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் 2008 முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்ற தாதுப்பொருள் வெட்டியெடுக்கும் பணியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க நீதிபதி எம்.பி.ஷா ஆணையத்தின் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.

ஷா ஆணையத்தின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல்வாதிகள் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள், மாஃபியா கும்பல்களின் ஆசியுடன் சட்ட விதிமுறைகளை மீறி தாதுப்பொருள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய நிறுவனங்களிடமிருந்து ரூ.60 ஆயிரம் கோடியை வசூலிக்க மாநில அரசு வேண்டும். அதற்கான சட்ட நடைமுறைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அந்த தொகையை சம்பந்தப்பட்ட கியோன்ஜார், சுந்தர்கர் ஆகிய மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். சுரங்கப் பணிகளால் பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் நலத்திட்டங்களுக்குச் செலவிட வேண்டும்.

இரும்புத் தாது ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும். அதை உடனடியாக அமல்படுத்த முடியாவிட்டால், உற்பத்தி அளவை ஆண்டுக்கு 150 மில்லியன் டன் என்ற அளவிலிருந்து 50 மில்லியன் டன்னாக குறைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரும்பு மற்றும் மேங்கனீஸ் தாது ஏற்றுமதியை தடை செய்யும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என்று மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

மாநில அரசு அறிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒடிசா மாநில அரசு வெளியிட்ட அறிக்கையும் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இதுவரை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 146 நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை. அதனால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

2008 – 2011 கால கட்டத்தில் மாநில அரசு இயந்திரம் சரியாக செயல்படவில்லை என்ற ஷா ஆணையத்தின் அறிக்கையை மாநில அரசு மறுத்துள்ளது. விசாரணை முடிவடையக் கூடிய நிலையில் உள்ளது. மீண்டும் வேறு ஒரு விசாரணை அமைப்பு விசாரணை நடத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லா சான்று பெறாமலும், நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகளவில் தாதுப்பொருள்களை வெட்டியெடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x